உதய் பாடகலிங்கம்
தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் தரும் முக்கியத்துவம் எத்தகையது? அவரது படங்களுக்கென்று ஏன் பெரிதாக எதிர்பார்ப்புகள் உருவாவதில்லை? அதையும் மீறி அவரது படங்கள் கொண்டாடப்படுவது எப்படி? சில ஆண்டுகள் படங்களே வெளிவராமல் இருக்க, திடீரென்று ஒரே ஆண்டில் பல படங்கள் வெளிவந்தாலும் அவருக்கான சந்தை மதிப்பு வீழ்ச்சியடையாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?,
பாக்ஸ் ஆபீஸ் வசூலை வைத்து விவாதிப்பதுதான் ஹாட் ட்ரெண்ட் என்பதால், ஜெயம் ரவியின் படங்கள் ஏன் 100 கோடி ரூபாய் இதுவரை வசூலிக்கவில்லை என்ற கேள்வியையும் இவற்றோடு எதிர்கொள்ள நேரிடுகிறது. இக்கேள்விகளுக்கு நடுவேதான், தற்போது ஜெயம் ரவியின் ‘அகிலன்’ வெளியாகவிருக்கிறது.
இதுநாள் வரை ஜெயம் ரவியின் படங்களைப் பார்த்து வந்த அனுபவத்தில், இது போன்ற கேள்விகள் நம்மிடமும் இருக்கலாம். உண்மையிலேயே, ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார்?
ஜெயமே பயம்!
2003 ஜுன் 21ஆம் தேதியன்று ரவி ஹீரோவாக நடித்த ‘ஜெயம்’ வெளியானது. அப்படிப் பார்த்தால், அவர் திரையுலகில் நுழைந்து 20 ஆண்டுகள் நிறைவடையவிருக்கிறது. அதன்பிறகு எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன், கோமாளி என்று மாபெரும் வெற்றிகளைத் தந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு பெருவெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறார். மழை, தீபாவளி, தாம் தூம், தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதி பகவன், ரோமியோ ஜூலியட், பூலோகம், போகன், வனமகன், அடங்க மறு உட்படப் பெயர் சொல்லும் வெற்றிகளைத் தந்திருக்கிறார்.
இதர படங்கள் எல்லாம் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகவோ, கூட்டுழைப்பில் குறைகள் கொண்டதாகவோ, ரசிகர்கள் விரும்பாத அம்சங்களைக் கொண்டதாகவோ அமைந்தவை என்று தாராளமாகச் சொல்லலாம்.
தந்தையும் சகோதரரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேர்ந்தெடுத்துச் சில படங்களில் நடித்தால் போதுமென்ற முடிவை நோக்கி ’ஜெயம்’ காலத்திலேயே நகர்ந்தவர் ரவி. எத்தனை ஆண்டுகள் இடைவெளியானாலும் நல்லதொரு படைப்பைக் கொடுத்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்ற பழமையான நம்பிக்கை அதன் பின்னிருக்கலாம். அதையும் மீறி, கிடைத்த வெற்றிகள் பறிபோய்விடாமல் தக்கவைக்க வேண்டுமென்ற பயமும் எச்சரிக்கையுணர்வை அதிகப்படுத்தலாம்.
வெற்றிகள் தரும் மகிழ்ச்சியை விட, அதிலேயே திளைத்திருக்கும் விருப்பத்தை விட, அவற்றை எப்படித் தக்க வைக்கப் போகிறோம் என்ற பயம் மிகப்பெரியது. எந்த துறையானாலும் தொடர்ந்து செயல்பட அது மிகவும் அவசியம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் வெளிவந்த நேர்காணல்களைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அந்த பயமே ஜெயம் ரவிக்குப் பக்கபலமாக இருக்கிறது என்பது பிடிபடும்.

கொண்டாடப்படாத வெற்றிகள்!
புயல் வேகத்தில் ஓடி வெற்றிக்கோட்டைத் தொடுபவருக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், மிகச்சீரான வேகத்தில் ஓடிக்கொண்டேயிருப்பவருக்கு நிச்சயம் கிடைக்காது. ஆனால், அவரது வெற்றிகளின் அளவு நாளாக ஆக பெரிய உயரங்களைத் தொடும். ஜெயம் ரவியின் வெற்றிகளும் அப்படிப்பட்டவையாக தென்படுகின்றன.
ரவி இதுவரை நடித்த அத்தனையும் கமர்ஷியல் படங்கள் என்றாலும், ஏதோ ஒருவகையில் அவை தனித்துவமானவை. கதையோ, களமோ, கதாபாத்திரமோ, திரைக்கதையின் வகைமையோ வழக்கத்தில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். பேராண்மைக்குப் பிறகு இந்த அம்சம் ரவியின் படங்களில் தொடர்ந்து வருகிறது.
’ஜெயம்’ தொடங்கி தொடர்ந்து ரீமேக் படங்களாக பார்த்துப் பார்த்து நடித்தவர், ‘தில்லாலங்கடி’க்குப் பிறகு அந்த வழக்கத்தைத் துறந்தார். வேறு நாயகர்கள் தன் படங்களை ரீமேக் செய்யட்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். ’தனி ஒருவன்’, ‘கோமாளி’ இரண்டும் வேறு மொழிகளில் உருவானாலும், தமிழ் ரசிகர்களுக்குக் அப்படங்களால் கிடைத்த அனுபவத்தை மறு ஆக்கம் செய்வது கடினம். காரணம், ஜெயம் ரவியின் இருப்பு மட்டுமே.
2010இல் வெகுவேகமாக ‘தில்லாலங்கடி’யைத் தந்தவர், அதன்பிறகு எங்கேயும் காதல், ஆதி பகவன், நிமிர்ந்து நில் படங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் தந்தார். மூன்றுமே பெரிய வெற்றிகளை ஈட்டவில்லை. ஆனால், 2015இல் தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், பூலோகம் மூன்றும் ஜெயம் ரவியைக் கவனிக்க வைத்தன.
அதன்பிறகு வெளியான சில படங்கள் அவரது இருப்புக்கு நியாயம் செய்வதாக இருக்கும். அவர் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் விதமும் அவற்றுக்காகச் செலுத்தும் உழைப்பும்தான், அப்படங்களின் குறைகளையும் தாண்டி ஓரளவு வெற்றியைச் சுவைக்கக் காரணமென்று கருதுகிறேன்.
தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவிக்கென்று பெரிய ரசிகர் படை இல்லாதபோதும், அவரது படங்கள் வித்தியாசமானதாக இருக்குமென்ற நம்பிக்கை நடுத்தரவர்க்க ரசிகர்களிடம் நிலவுகிறது. ஒருகாலத்தில் முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் என்று ஒரு சிலருக்கே அப்படிப்பட்ட அந்தஸ்தை ரசிகர்கள் தந்தார்கள். ’ஃபாஸ்ட் புட்’ காலகட்டத்தில் அது ரவிக்கு கிடைத்திருப்பது ஆச்சர்யமான விஷயம்.
என்னைக் கேட்டால், தெலுங்கு திரையுலகில் வெற்றிகரமாக உலா வரும் வெங்கடேஷ் உடன் ரவியை ஒப்பிடலாம் என்பேன். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர், தொடக்க காலத்தில் ரீமேக் படங்களில் ஆர்வம் காட்டியவர் என்பது தொடங்கி சமகால நடிகர்களின் வெற்றி தோல்விகளுக்கு நடுவே மிகச்சீராக வெற்றிகளைத் தருவது வரை பல விஷயங்களில் இருவரது திரை வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உண்டு. வெங்கடேஷ் பெயருக்கு முன்னால் ‘வெற்றி’ என்று பொருள்படும் ‘விக்டரி’ குறிப்பிடப்படுவதையும் கூட அந்த வரிசையில் சேர்க்கலாம். கடந்த பத்தாண்டுகளில் ரவியின் வெற்றிகள் மீதான நம்பிக்கை விளம்பரப்படுத்தல் இல்லாமல் திரைத்துறை சார்ந்தவர்களிடத்தில் மிகப்பரவலாக கிளை விரித்திருக்கிறது.
மேற்சொன்னவற்றை மீறி, தனது படங்களின் வெற்றியை முன்னிலைப்படுத்துவதில் ஜெயம் ரவி தரப்பு சுணக்கம் காட்டுவதாகவே தோன்றுகிறது. விஸ்வரூப விளம்பரங்களால் எழும் மாபெரும் எதிர்பார்ப்பு தேவையற்ற சுமை என்று கூட அவர் கருதலாம். அதனாலும், அவரது வெற்றிகள் பெரிதாக கொண்டாடப்படவில்லையோ என்ற எண்ணம் தானாக எழுகிறது.

மலையேறும் அனுபவம்!
ஜெயம் ரவியை இவ்வளவு புகழ வேண்டிய அவசியம் என்னவென்ற கேள்வி எழலாம்.
இன்றைய காலகட்டத்தில் குடும்பத்துடன் ரசிக்கும்படியான ஒரு படைப்பைத் தர வேண்டுமென்ற மெனக்கெடல் ரவியிடம் அதிகமிருக்கிறது. மிக முக்கியமாக, எதிரே இருக்கும் ஆளை அடித்துச் சாப்பிடும் வன்முறை அவர் படத்தில் அறவே இருக்காது. இதுவரை அதுதான் நிலைமை. ’அடங்க மறு’ படத்தில் வன்முறையைக் கொட்டப் பெருமளவு வாய்ப்புகள் இருந்தும் திரையில் அது வெளிப்பட்டிருக்காது.
தாஸ், தீபாவளி, நிமிர்ந்து நில், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், கோமாளி என்று பல படங்களில் ரவி ஏற்ற பாத்திரங்கள் ‘ஜெண்டில்மேன்’ ஆகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். ‘மிக நல்லவன்’ என்ற பாத்திர வார்ப்பு எம்ஜிஆர் காலத்தோடு முடிந்துவிட்டதாகச் சொல்பவர்கள், நிச்சயம் ரவியின் படங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட பாத்திரங்கள் கிடைத்ததை ரவியின் அதிர்ஷ்டம் என்பதைவிட, அவற்றுக்காக காத்திருந்தார் என்று சொல்வதே சாலச் சிறந்தது.
வெளியே சொல்லப்படாத இந்த உத்திதான், ரவியின் படங்களுக்கு குடும்பத்துடன் ரசிகர்கள் வரக் காரணமாயிருக்கிறது. இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்தால், அந்த எண்ணிக்கையைப் பன்மடங்காக அவரால் பெருக்க முடியும். ’கோமாளி’ போல வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்படும்போது, அங்கும் அவருக்கென்று புதிதாக ரசிகர் வட்டம் அமையலாம். தற்போது வெளியாகும் ‘அகிலன்’ தாண்டி மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தலாம். அப்போது, 100 கோடி வசூல் என்ற வார்த்தை ரவியின் பிலிமோகிராஃபியிலும் சாதாரணமானதாக மாறக்கூடும்.
ஆனால், அபார வசூலை விட விதவிதமான கதைகளோடு நல்ல திரையனுபவத்தைத் தந்துகொண்டிருக்கும் ரவியின் பயணம் அப்படியே தொடர வேண்டுமென்றே விரும்புகிறேன்.
2000களில் சச்சினும் கங்குலியும் இந்திய கிரிக்கெட் அணியை உலகமெங்கும் பிரபலப்படுத்திய காலத்தில்தான் ராகுல் டிராவிட்டும் விளையாடினார். அதன்பிறகு அவர்களிருவரைப் போன்ற ஆட்டக்காரர்கள் அவ்வப்போது அடையாளம் காணப்பட்டு வந்தாலும், டிராவிட்டின் ஆட்டத்தை ரசித்தவர்கள் அதற்கிணையான வீரர்களை இன்றும் சலிக்காமல் தேடி வருகின்றனர். அந்த வரிசையில் இடம்பெறும் சாதனையாளர்கள் எல்லா துறையிலும் உண்டு. அவர்களனைவருமே சரிவாக மேலெழும் மலை மீது ஏறுபவர்களாகத் தோற்றமளிக்கின்றனர்.
அப்படியொரு சாதனையாளராகவே தமிழ் திரையுலகில் ரவியும் காட்சி தருகிறார். அவரிடம் கேட்டால், ‘ஐயையோ ஆளை விடுங்க’ என்று சொல்லலாம். ஏன், வெற்றிகரமான நாயகர் இப்படிப் பதில் சொல்லக்கூடாதா?
ரஷ்ய தாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட உக்ரைன் நகரம்!
கிச்சன் கீர்த்தனா: எலும்பு ரசம் !