உதயசங்கரன் பாடகலிங்கம்
சில திரைப்படங்கள், பாடல்கள், காட்சிகள், ஷாட்கள் குறிப்பிட்ட சில ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். சம்பந்தப்பட்ட இயக்குனர், நட்சத்திரங்கள், அதில் பணியாற்றியவர்கள் மறந்துவிட்டால் கூட, ரசிகர்களின் நினைவில் அவை எப்போதும் பசுமையாக இருக்கும்.
அந்த வரிசையில் இடம்பெறத்தக்க ஒரு திரைப்படம் ‘தாஸ்’. ஜெயம் ரவி, ரேணுகா மேனன், மோனிகா, அபிநய், சண்முகராஜன், வடிவேலு, சலீம் கௌஸ், கிருஷ்ணா, லிவிங்ஸ்டன், நிழல்கள் ரவி, மகாதேவன், பெப்சி விஜயன், நிரோஷா, தாரிகா, தியாகு, சீதா என்று பலர் இதில் நடித்திருந்தனர்.
பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கிய இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2005 ஜூலை 29 அன்று இப்படம் வெளியானது. இன்றோடு இப்படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகின்றன.
வேறுபட்ட பார்வை!
திருநெல்வேலியில் தொடங்கி மதுரை வட்டாரத்திற்கு நகர்வதாக ‘தாஸ்’ கதையை வடிவமைத்திருந்தார் பாபு யோகேஸ்வரன்.
திருநெல்வேலி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தேர் திருவிழா நடக்கிறது. அது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் தெருவுக்கும் வர வேண்டுமென்று தேரை இழுத்துச் செல்கின்றனர் சிலர். ஆண்டனி தாஸ் (ஜெயம் ரவி) அதனை முன்னின்று செயல்படுத்துகிறார். அது, அந்த ஊரில் செல்வாக்குமிக்கவராக இருக்கும் அண்ணாச்சிக்கு (சண்முகராஜன்) கோபத்தை ஏற்படுத்துகிறது.
சாதி வேறுபாட்டினை வெளிப்படையாக முன்வைக்கும் அண்ணாச்சிக்கும், அவரது ஆட்களுக்கும் எதிராகத் தாஸ் தலைமையில் இளம் வாலிபர்கள் திரள்கின்றனர். இந்த நிலையில், தாஸின் நண்பனும் அண்ணாச்சியின் உறவினர் பெண்ணும் ‘காதல்’ காரணமாக ஊரை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் தாஸ். ஆனால், அவரது கண் முன்னே இருவரும் கொல்லப்படுகின்றனர்.
அந்த சம்பவம் அண்ணாச்சியின் மகள் ராஜேஸ்வரியை கடுமையாகப் பாதிக்கிறது. சாதி வேற்றுமை பாராட்டும் தந்தைக்குப் பாடம் புகட்ட, தான் காதலிக்கும் தாஸ் உடன் அவர் செல்கிறார்.
அந்த ஜோடி மதுரையில் இருக்கும் நசீர் (கிருஷ்ணா) வீட்டுக்குச் செல்கிறது. அவரது தந்தை (சலீம் கௌஸ்) அந்த ஜோடிக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவர்கள் இருக்குமிடம் தெரிந்து, அங்கு ஆட்களோடு வருகிறார் அண்ணாச்சி. அந்த ஜோடியைப் பிரிப்பதற்கான வேலையைச் செய்கிறார்.
இதற்கிடையே நசீரின் சகோதரரும் சிலரும் சேர்ந்து ஒரு அரசியல்வாதியைக் கண்ணி வெடி வைத்துக் கொல்ல முயற்சிக்கின்றனர். அதனை அறியும் தாஸ், எப்படித் தன்னையும் தன்னைச் சார்ந்த மக்களையும் தன்னுயிரைக் கொடுத்து காப்பாற்றத் துணிகிறார் என்று சொன்னது இப்படம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, அவர்களில் ஒருவராக இருக்கும் நாயகனிடம் இருக்கும் சமூகம் சார்ந்த சிந்தனை, சாதி வேற்றுமை பாராட்டும் சிலரது குயுக்திகள், அரசில் பணியாற்றுபவர்கள் அது போன்ற நபர்களுக்குச் செய்யும் உதவிகள் என்று வழக்கமான கமர்ஷியல் சினிமா காணாத ஒரு உலகத்தைக் காட்டியது ‘தாஸ்’. ஒரு வேறுபட்ட பார்வையை முன்வைத்தது. அது, இப்படம் மீது குறிப்பிட்ட ரசிகர்கள் கவனத்தைக் குவிக்கக் காரணமானது.
நினைவில் நிற்கும் யுவனிசை!
பத்திரிகைகள், தினசரிகளில் பணி, தொடர்ந்து தொலைக்காட்சித் தொடருக்கு வசனம் எழுதும் வாய்ப்பு, அடுத்து படம் இயக்கும் பணியில் மூழ்கியது என்றிருந்தவர் பாபு யோகேஸ்வரன். தொடர்ந்து திரையுலகை ஒரு கண் பார்த்துக்கொண்டே தொலைக்காட்சியில் இயக்கியவர். இவர் முதன்முதலாக இயக்கிய படம் ‘தாஸ்’.
‘ஜெயம்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படங்களுக்குப் பிறகு, சொந்தத் தயாரிப்பு அல்லாமல், சகோதரர் ராஜாவின் இயக்கம் இல்லாமல், ரவி நாயகனாக நடித்த படம் இது. அதாகப்பட்டது, அதுவரை தான் பழகிய வட்டத்தை விட்டு வெளியேறி அவர் நடித்த முதல் படம் இதுவே.
கால்பந்து வீரராக நாயகன், நெல்லை வட்டாரத்தில் நிகழும் காதல் கதை, ஆணவக் கொலை என்று பல விஷயங்கள் இதில் இருந்தன. ஆனால், ஒரு கமர்ஷியல் திரைப்படத்தின் ஒரு பகுதியாகவே அவை பார்க்கப்பட்டன.
இது போன்ற சில காரணங்களால், இப்படம் தயாராவதிலும் சிறிது காலம் தாமதம் ஏற்பட்டது. ஜெயம் ரவியின் இரண்டாவது படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகே ‘தாஸ்’ வெளியானது. இப்படத்தின் பட்ஜெட் அதிகம் என்று அப்போது செய்திகள் வெளியாகின. அதனால் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் படம் குறித்த அபிப்ராயங்கள் மிகுந்திருந்தன. அதற்கு நடுவே வெளியாகிக் கலவையான விமர்சனங்களுடன் வெற்றிக்கோட்டையும் தொட்டது இப்படம்.
வடிவேலு உடன் ஜெயம் ரவி நடித்த காட்சிகள் ‘தனித்தீவு’ போலத் தெரிந்தாலும், அவை ரசிகர்களால் வரவேற்கப்பட்டன. ரேணுகா மேனன் உடன் ஜெயம் ரவி நடித்த டூயட் பாடல்கள் சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
‘சக்கை போடு போட்டாளே’, ‘சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்’, ‘ஷாகிபா ஷாகிபா’, ’வா வா நீ வராங்காட்டி போ போ’ பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தன. அவை போக ‘நீ என் விழியில்’, ‘என்னோட ராசி நல்ல ராசி’ பாடல்களும் கல்லூரி பயிலும் ஆண்கள், பெண்களைத் துள்ளலாட்டம் போட வைத்தன. ஆதலால், யுவனின் ஹிட் ஆல்பங்களில் ஒன்று எனும் சிறப்பினைப் பெற்றது ‘தாஸ்’.
நாயகியின் தந்தையோடு நாயகனுக்கு ஏற்பட்ட மோதலே கதையின் அடிவேர் என்றபோதும், கிளைமேக்ஸில் தீவிரவாதம், கண்ணிவெடி என்று இன்னொரு திசை நோக்கிச் சென்றிருக்கும் திரைக்கதை. அதனால், வில்லனை முடிவு செய்வதில் ரசிகர்களுக்குத் திணறல் ஏற்பட்டது. படத்தொகுப்பு மேஜையில் நிறைய முறை ‘கத்திரி’ போடப்பட்டிருப்பதும் பின்னர் தெரிய வந்தது.
அவற்றை மீறி ‘தாஸ்’ படம் வெளியானபோது ரசிகர்களின் வரவேற்பு அபாரமானதாக இருந்தது. ஜெயம் ரவி – ரேணுகா ஜோடி பாடல்களில் தோன்றியிருந்த விதம் ஈர்க்கும் வகையில் அமைந்தது.
‘தாஸ்’ வெளியான காலத்தில் ஆணவக்கொலை குறித்தோ, சாதி வெறி பற்றியோ பெரிய விவாதம் நிகழவில்லை. ஆனால், அதன்பிறகு அவை தொடர்பான பல செய்திகள் வெளியானபோது பல கேள்விகள் எழுந்தன. அது தொடர்பாகப் பல திரைப்படங்களும் வெளிவரத் தொடங்கின.
’தாஸ்’ ஏதோ ஒருவிதத்தில் அதற்கு முன்னரே அம்முயற்சியை மேற்கொண்ட படங்களில் ஒன்றானது. அதன் காரணமாக, இப்போது அப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது பெரிதாக வரவேற்கப்படுகிறது.
யூடியூப்பில் இதன் இந்தி மொழியாக்கப் பதிப்பு 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
‘தாஸ்’ படத்திற்குப் பிறகு, பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ‘தமிழரசன்’ படத்தை இயக்கினார் பாபு யோகேஸ்வரன். அதுவும் கோவிட் 19 காலத்தில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த ஆண்டு தான் வெளியானது. ஜீ5 தளத்திற்காக, அவர் உருவாக்கிய ‘காட்மேன்’ வெப்சீரிஸ் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
‘தாஸ்’ படத்திற்குப் பின்னர் ‘மழை’, ‘இதயத்திருடன்’, ‘தீபாவளி’, ‘தாம்தூம்’, ‘பேராண்மை’, ‘எங்கேயும் காதல்’, ‘ஆதி பகவன்’ என்று சகோதரர் ராஜா தவிர்த்து வேறு பல இயக்குனர்களுடன் இணைந்தார் ரவி. அப்படங்களில் சில அவருக்கு இன்னொரு அடையாளத்தையும் தந்தன. அந்த வரிசையில், தற்போது பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை என்று ரவியின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகக் காத்திருக்கின்றன. இதுவரை பெற்ற உயரத்தை விட, இன்னும் உச்சத்தை எதிர்காலத்தில் அவர் தொடக்கூடும்.
ஆனாலும், தனது சினிமா வாழ்வில் ‘தாஸ்’ படத்தைத் தேர்ந்தெடுத்ததும் அதில் நடித்ததும் மாறுபட்ட அனுபவத்தை ஜெயம் ரவிக்குத் தந்திருக்கும் என்பதை அவரால் மறுக்க முடியாது. குடும்பத்தின் நிழலில் இருந்தவரை, திரையுலகின் தகிப்பைக் காணச் செய்தது அப்படம் தான். அதே போல, ஒரு வாரிசு நடிகராக இருந்தவரை நட்சத்திரமாக மாற்றியதும் அதுவே. அதனாலேயே, ஜெயம் ரவியின் நீண்டகால ரசிகர்களுக்குப் பிடித்த படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ‘தாஸ்’!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொதுமக்களின் புகாருக்கு உடனடி தீர்வு… அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு!
தனுஷ் படத்துக்கு தடை: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு… இதுதான் காரணம்!