‘தம்பியுடையான்படைக்கு அஞ்சான்’ என்பது பழமொழி .அதனை உல்ட்டாவாக ‘அண்ணன் இருக்கும்போது எனக்கு எல்லாமே ஜெயம்தான்’ என கூறியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் இறைவன். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இயக்கியுள்ளார்.
வரும் செப்டம்பர்28ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியாக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (செப்டம்பர் 25) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.
ஜெயம் ரவி கூறுகையில், “இறைவன் என்றாலே அன்புதான். எதற்காக இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள்.
இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, ‘இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது. கொரோனா பொது முடக்கம் காரணமாக ‘ஜனகன மண’ திரைப்படம் பாதியில் நின்றது.
அதன் பின்புதான் ‘இறைவன்’ தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார்.
ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள்.
ஹெச்.வினோத் படங்கள் திரைத்துறையை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. இயக்குநர் அஹமதின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. ‘பொன்னியின் செல்வன்’ படம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் ராஜா கேட்டார்.
ஏன் ‘தனி ஒருவன் 2’ பண்ண மாட்டாயா? என்று நான் திருப்பி கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான்” என்றார்.
இராமானுஜம்
டெண்டர் முறைகேடு வழக்கு: அக்டோபர் 17-க்கு ஒத்திவைப்பு!
பாஜகவா? திமுகவா?: கோஷம் போட்டு மெஜாரிட்டி நிரூபித்த தொண்டர்கள்