ஜவான்: பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

சினிமா

ஜவான் திரைப்படம் வெளியாகிய எட்டு நாட்களில் ரூ.700 கோடி வசூல் செய்துள்ளது.

இந்திய சினிமாவில் ஆமீர்கான் நடிப்பில் 2016ல் வெளிவந்த ‘டங்கல்’ இந்திப் படம் உலக அளவில்  ரூ.2000 கோடி மொத்த வசூல் செய்த முதல் இந்தியப்படமாகும். அதனை தொடர்ந்து 2017ல் வெளிவந்த ‘பாகுபலி 2’ தெலுங்குப் படம் ரூ.1800 கோடி மொத்த வசூல் செய்தது. இந்த சாதனையை வேறு எந்த இந்திய திரைப்படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

தெலுங்கு படமான ‘ஆர்ஆர்ஆர்’ ரூ.1300 கோடியையும், ‘கேஜிஎப் 2’ கன்னடப்படம் ரூ.1200 கோடியும் மொத்த வசூல் செய்தன. இந்தி திரையுலகம் வசூல் ரீதியாக முடங்கி இருந்த நிலையில் ஜனவரி 25 அன்று ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான பதான் சுமார் ரூ.1100 கோடி மொத்த வசூல் செய்தது.

அதன்பின் வெளியான எந்த இந்திய திரைப்படமும் ரூ.1000 கோடி வசூலை இந்த வருடம் எட்டிப் பிடிக்க முடியவில்லை. செப்டம்பர் 7 அன்று தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கத்தில்  வெளியான ஜவான் தொடக்கம் முதலே பாக்ஸ்ஆபீஸ் வரலாற்றில் பல்வேறு குறுகிய கால வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்தி சினிமாவில் முதல் நாள் ரூ.77 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை நிகழ்த்தியது கடந்த எட்டு நாட்களில் சுமார் ரூ.700 கோடி வசூல் செய்துள்ளது. ஜவான் சனி ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால் பதான் படத்தின் மொத்த வசூல் சாதனையான ரூ.1100 கோடியை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜவான் படத்தின் வெற்றியை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் நேற்று மும்பையில் ஜவான் படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் விதமாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஷாருக்கானுடன், தீபிகா படுகோனேவும் கலந்துகொண்டார். ஜவான் வெற்றிக்காக நன்றி தெரிவித்த ஷாருக்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

பதான் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிகழ்வில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்த தீபிகா படுகோனே அவருக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதே போன்று நேற்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நடனமாட வரும்படி ஷாருக்கானை மேடைக்கு அழைத்தார். அவருடன் மேடையேறிய தீபிகா படுகோன் நடனமாடியதுடன் ஷாருக்கானை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதன் பின்னரும் தொடர்ந்து தீபிகா படுகோன் ஷாருக்கான் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ஷாருக்கான் கேட்டுக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என தீபிகா படுகோன் ஏற்கனவே பல முறை கூறியுள்ளார்.

பதான் படத்தில்  பிகினி உடையில் நடித்து ரசிகர்களை கலங்கடித்தார் தீபிகா. மேலும், ஜவான் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம். ஜவான் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் ஷாருக்கான் மனைவியாக ஐஸ்வர்யா ரத்தோர் என்ற கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ஜவான் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில்  கலந்துகொண்ட தீபிகா படுகோன், ஷாருக்கானுக்கு  முத்தம் கொடுத்த போட்டோ, x உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராமானுஜம்

மார்க் ஆண்டனி: விமர்சனம்!

கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை

 

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *