சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்து ஜனவரி 25அன்று வெளியானது பதான்.
இதற்கு முன்பாக ஷாருக்கான் நடிப்பில் 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் படம் பல தடைகளை எதிர்கொண்டது. இறுதியில் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று, வெளியானது.
இந்தியாவில் பெருநகரங்களான டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது . உலக அளவில் மொத்தம் 8,500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது.
படம் திரையிடப்பட்ட முதல் நாளில் ரூ.55 கோடி வசூல் செய்து விடுமுறை அல்லாத நாளில் வெளிவந்து முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய பெருமையையும், இந்தியாவில் அதிக திரையரங்குகளில் வெளிவந்த படம் என்ற சாதனையையும் பதான் நிகழ்த்தியது.
ஷாருக் கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரஹாமின் திரை வாழ்க்கையிலும் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையை தனதாக்கி கொண்ட பதான் சுமார் 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் உலக அளவில் சுமார் 1200 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்தது.
இந்த வருடம் வெளியான இந்தியப் படங்களில் முதல் இடத்தை பிடித்தது பதான். எட்டு மாத இடைவெளியில் ஷாருக்கான் தனது குடும்ப நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ஜவான். படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
செப்டம்பர் 7 அன்று ஜவான் உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. நயன்தாரா முதன்முறையாக இந்திப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து அறிமுகமாகிறார். தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, யோகிபாபு, நடிகை பிரியாமணி நடித்துள்ளனர். படத்திற்கு இசை அனிருத், இயக்குநர் அட்லி என தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.
அதனால் தமிழ்நாட்டில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய ஷாருக்கான் கிட்டத்தட்ட தமிழ் நடிகராகவே மாறி படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் பட்டப் பெயர்களை சூட்டி அரங்கை அதிரவைத்தார்.
நிகழ்வில் பேசிய ஷாருக்கான், “இந்த மாதிரி ரசிகர்கள் கரகோஷத்துடன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என் வாழ் நாளில் இதுவே முதல் முறையாகும். தமிழ் சினிமாவில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் அபார திறமை எனக்கு ஏற்கனவே தெரியும்.
கமல்ஹாசனின் ஹேராம் படத்துக்காக நான் முதல் முறையாக தமிழ் பேசிய அனுபவம் உள்ளது.
விஜய் சேதுபதியிடமிருந்து நான் நிறைய கற்றுகொண்டேன். விஜய் சேதுபதி நீங்கள் என்னை பழிவாங்கலாம். ஆனால் என்னை விரும்பும் பெண் ரசிகைகளை நீங்கள் எடுத்துகொள்ள முடியாது.
‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலிலிருந்து அனிருத்தை கவனித்து வருகிறேன். ஒரு இந்தி, ஒரு தமிழ் பாடலுக்கு மட்டும் அனிருத்தை இசையமைக்க வைக்கலாமா என அட்லி கேட்டார். ஏன் ஒரு பாடலுக்கு மட்டும், மொத்தப் படத்துக்கும் அவரே இசையமைக்கட்டுமே என்று சொன்னேன்.
அனிருத் சின்ன வயதில் பெரிய சாதனையை செய்து வருகிறார். என் சொந்த மகனைப்போலவே அனிருத்தைப் பார்க்கிறேன். அவர் என்னுடைய குழந்தை.
நான் ஷோபி மாஸ்டரிடம் எனக்கு கடினமான ஸ்டெப்பை கொடுக்காதீர்கள் என்றேன். காரணம் நான் விஜய் மாதிரி நடனமாட மாட்டேன் என்றேன். என்னை நடனமாட வைத்துவிட்டார் ஷோபி மாஸ்டர்” என்றார்.
தொடர்ந்து படக்குழுவினருக்கு தமிழில் பட்டங்களை வழங்கி பேசிய ஷாருக்கான், “நான் தமிழில் அட்லியை ‘மரண மாஸ்’ என்றுதான் வாழ்த்த முடியும். ‘கம்பீரமான’ முத்துராஜ், ‘விறுவிறுப்பான’ ரூபன், ‘அட்டகாசமான’ விஜய் சேதுபதி, ‘வித்தைக்காரன்’ அனிருத், ‘வசீகரமான’ நயன்தாரா” என பலருக்கும் பட்டப் பெயர் வைத்துப் பேசினார் ஷாருக்கான்.
தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “என்னுடைய சகோதரர் இயக்குனர் அட்லிக்கு நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குனர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல சவாலானது.
பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.
வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்குமா என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா? என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கிங் கான் ஷாருக்..நான் உங்களை தவற விடுகிறேன். நீங்கள் தினமும் இரவில் பேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன். ஷாருக்கான் மிகவும் அன்பானவர்.
குடும்பத்தில் ஒருவராக பழகக்கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று அங்கிருந்து எனக்கு போன் செய்து என் உடை அளவை தெரிந்து கொண்டு எனக்காக பிரத்தியேகமான ஆடையை வாங்கி பரிசாக அளித்தார்.
அந்த அன்பு ஈடு இணையற்றது. இந்த படத்தில் ஷாருக்- அட்லி இணைந்திருப்பதால் இந்தி திரைப்படமாக பார்க்காமல் இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பது இல்லை. அதே போன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம், மு.வா.ஜெகதீஸ் குமார்
சென்னையில் வீடுகள் விலை உயர்வு!
நள்ளிரவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை: நெல்லையில் பயங்கரம்!