“ஆர் ஆர் ஆர்” படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ராம் சரணின் 15 வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அந்த படத்திற்கு கேம் சேஞ்சர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இயக்குநர் ஷங்கருக்கும் நடிகர் ராம் சரணுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
அதேபோல் தீபாவளிக்கு கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகாமல் தள்ளி போனது.
இதனை தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்திற்கு பின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
மேலும் மார்ச் 27ஆம் தேதி நடிகர் ராம்சரனின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே அவரது பிறந்த நாள் கொண்டாட்டமாக தொடர்ந்து அவரது படங்களின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் RC 16 படத்திற்கான பூஜை விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் நடிக்கின்றார். விரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து RC 16 படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த இரண்டாவது நாளே ராம்சரணின் 17 வது படம் குறித்த அப்டேட் வெளியானது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பின் தற்போது ராம்சரண் 17வது படத்தை இயக்குநர் சுகுமார் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. RC 17 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.
RC 16, RC 17 என தொடர்ந்து ராம் சரணின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியானாலும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் அப்டேட் வெளியாகாமலே இருக்கிறது என ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்தபோது, திடீரென கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் “ஜரகண்டி” ராம் சரண் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “ஜரகண்டி” இன்று (மார்ச் 27) காலை 9 மணிக்கு வெளியாகி உள்ளது.
ஜரகண்டி பாடலின், வண்ணமயமான பெரிய செட்டுகள், நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் என ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலிலேயே ஷங்கர் தனது பிரம்மாண்ட ஸ்டைலை காட்டி உள்ளார். பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இந்தப் பாடலில் நடிகர் ராம் சரணும் நடிகை கியாரா அத்வானியும் இணைந்து செம எனர்ஜிடிக்காக நடனமாடி உள்ளனர்.
இசையமைப்பாளர் தமன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் கேட்டவுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது ஜரகண்டி பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேம் சேஞ்சர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
அதிமுக கூட்டணிக்கு போகாதது ஏன்?: அன்புமணி விளக்கம்!
மருத்துவமனையிலிருந்து சத்குரு டிஸ்சார்ஜ்!
திருமா முதல் அண்ணாமலை வரை… கடைசி நாளில் மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள்!