ஜப்பானில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம் (ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘ஆர்ஆர்ஆர்’.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான இப்படத்தில், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியான இப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்றுத் தந்தது.
மேலும், சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் எல்லாம் கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளுக்கு போட்டி போட்டாலும், நாமினேஷனுக்கு தேர்வாகவில்லை. ஆனால், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு 2 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வானது. அதுபோல், அமெரிக்காவின் புகழ்மிக்க கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுக்கு 5 பிரிவுகளின் கீழ் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல் (நாட்டுக் கூத்து) உள்ளிட்ட 5 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகாவிட்டாலும், 14 பிரிவுகளில் நேரடியாகப் போட்டியிட இருக்கிறது.
இந்த நிலையில், ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்த மாதம் ஜப்பானில் வெளியானது. அங்கு இப்படம் இதுவரை ரூ.24 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஜப்பானில் இந்திய படங்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. இதனால்தான் 1995ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘முத்து’ திரைப்படம் அங்கு மாபெரும் வரவேற்பு பெற்றது.
அப்போது அந்தப் படம்தான் அதிகம் வசூலித்த (ரூ.23.50 கோடி) இந்திய படமாக சாதனை படைத்திருந்தது. அதை, தற்போது ஆர்ஆர்ஆர் முறியடித்துள்ளது. ராஜமெளலியின் பாகுபலி 2 படம், இங்கு 17 கோடி ரூபாய் வசூலித்திருந்த நிலையில், ஆர்ஆர்ஆர் படம் அதையும் முறியடித்து முதலிடத்தில் இருப்பதால் ராஜமெளலி அதிக சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
ஜெ.பிரகாஷ்
ஐஸ்வர்யா ராயுடன் காதல்: விவேக் ஓபராயின் விநோத பதில்!
உள்ளாட்சி அமைப்பின் நிதி அதிகாரம்: உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!