கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ற படம் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
குக்கூ, ஜோக்கர் ஆகிய வித்தியாசமான படங்களை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வரும் தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (அக்டோபர் 28) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கார்த்தியுடன் இதற்கு முன் பணியாற்றிய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அப்போது அவரிடம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை. ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இது போன்ற சிக்கல்கள் ஏதாவது உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு,
“ஜப்பான் படத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தேவையான அனுமதி கிடைத்துள்ளன.
இதில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கும் டிக்கெட் வழங்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் பார்த்துக் கொள்வார்கள்.
ஜப்பான் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ற படம். குடும்ப ரசிகர்கள் மத்தியில் ஜப்பான் திரைப்படம் அதிருப்தியை ஏற்படுத்தாது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், லியோ சர்ச்சை மற்றும் டிக்கெட் விலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“லியோ ஸ்கிரிப்ட் என்பது கலை சுதந்திரம். ஆனால் அதே நேரத்தில் சமூக பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும்.
படத்தின் தேவை மற்றும் வரவேற்பை கருத்தில் கொண்டு சரியான டிக்கெட் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுளக்ஸ் திரைப்படமும் வெளியாகிறது. இதனால் ஜப்பான் படத்துக்கு போதிய அளவு திரையரங்குகள் கிடைக்குமா?, வசூல் பாதிக்காதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “தீபாவளிக்கு மூன்றாவதாக ஒரு படம் வெளியானாலும் எங்கள் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற திரையரங்குகளும் காட்சிகளும் கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கேஜிஎப், பீஸ்ட் படங்கள் ஒன்றாக வெளியான சமயத்தில் தினசரி ஆறு காட்சிகள் ஓடும் அளவிற்கு ஒரு சிஸ்டம் கொண்டு வந்திருந்தார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது.
எங்களது படத்திற்கு எத்தனை திரையரங்குகள் கிடைக்கின்றன என்பதை விட எத்தனை பேர் இந்த படத்தை பார்க்க விரும்புகிறார்கள் என்பதில் தான் படத்தின் வெற்றியே இருக்கிறது” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
Asian Para Games 2023: பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா!
ஆளுநரின் நோக்கம் முறியடிக்கப்படும் : வைகோ