கார்த்தி பிறந்தநாள்: அதிரடி அப்டேட் கொடுத்த ’ஜப்பான்’ படக்குழு!
நடிகர் கார்த்தியின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜப்பான்’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று ( மே 25) அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திர நடிகராக வலம் வருபவர் கார்த்தி. முதல் படமான பருத்திவீரன் முதல் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் வரை பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
இதனைத்தொடர்ந்து கார்த்தி தற்போது இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அவரது 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் கார்த்தியின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
மேலும் தங்கப் பல், தங்க செயின், தங்க உடை, தங்க துப்பாக்கி, தங்க கட்டிகள் என தகதகவென தங்கத்தில் ஜொலிக்கும் கார்த்தியின் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ’ஜப்பான் யார்’ என்பது குறித்து அறிமுக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
‘தமிழ் ஒவ்வொரு இந்தியனின் மொழி’: பிரதமர் மோடி
கள் இறக்குவதற்கு அனுமதி?: அமைச்சர் கூறிய தகவல்!