தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10ஆம் தேதி கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபுவின் ரெய்டு ஆகிய படங்கள் வெளியானது. நவம்பர் 11 ஆம் தேதி காளி வெங்கட்டின் கிடா படம் வெளியானது.
இந்த படங்களில் ராஜூ முருகனின் ஜப்பான் படத்திற்கும், கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கும் தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் படம் கார்த்தியின் 25வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இதன் காரணமாக ஜப்பான் படம் முதல் நாளில் 4.15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.
அதேபோல் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதல் நாளில் 3 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
முதல் நாள் முதல் காட்சிக்கு பிறகு ஜப்பான் படத்திற்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் கிடைக்க தொடங்கியது.
ஆனால் கார்த்திக் சுப்பாராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள் என அனைவரின் மத்தியிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
அதன்பிறகு இரண்டாவது நாள் ஜப்பான் படம் 3.10 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் இரண்டாவது நாளில் 5.21 கோடி ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி நாளன்று ஜப்பான் படம் 4 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் 7 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படங்கள் வெளியான மூன்று நாட்களில் ஜப்பான் படம் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும்,
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி உள்ளதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஒருபுறம் இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மோதிக் கொண்டு இருக்க, மற்றொரு புறம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும்,
கிடா படத்திற்கு டிக்கெட் அதிகம் விற்கவில்லை என்பதற்காக காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அந்த படத்தின் இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
தொடர் மழையால் அழுகும் தக்காளிகள்: மீண்டும் விலை உயரும் அபாயம்!
காசா அழிவுக்கு இந்தியா ஆதரவு அளிப்பது அவமானம்: பிரியங்கா காந்தி