தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான நேரடி தமிழ் படங்களில் நான்கு நாட்களில் சுமார் 80 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்ததன் மூலம் குறுகிய நாட்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை ‘ஜெயிலர்’ படம் நிகழ்த்தியுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்களும் இந்தாண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் வெளியானது. இதனால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. ஆனால் ஜெயிலர் படம் எந்த வித போட்டியுமின்றி அனைத்து திரையங்குகளிலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஷாக்கி செராப்,ஷிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், விநாயகன், வசந்த்ரவி,யோகி பாபு, மிர்னா என பலர் நடித்துள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் லிங்கா(2014) கபாலி(2016) காலா, 2.0(2018) பேட்ட(2019) தர்பார்(2020) அண்ணாத்தே(2021) ஆகிய ஏழு படங்களும் செய்யாத வசூல் சாதனையை தமிழ் நாட்டில் மட்டுமின்றி கேரள, கர்நாடக, ஆந்திர, தெலங்கானா மாநிலங்களிலும் ‘ஜெயிலர்’ திரைப்படம் செய்துள்ளது.
தென்னிந்திய மொழிகளில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஆகியோர் ஜெயிலர் படத்தில் நடித்திருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக அமைந்தது. தமிழ்நாட்டில் 815 திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் எழுந்த பின் ’ஜெயிலர்’ படத்தின் முதல் நாள் மொத்த வசூல் மூலம் சாதனை நிகழ்த்தவேண்டும் என சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் தரப்பில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை கூறி பரபரப்பை ஏற்படுத்தியதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் தரப்பில் எழுச்சி ஏற்பட்டது. அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் ஜெயிலர் படம் திரையிட்ட திரையரங்குகளில் கட் அவுட், பாலாபிஷேகம் என அமர்களப்பட்டது.
முதல் நாள் நகர்புறங்களில் இருக்கும் முதல் தரமான திரையரங்குளில் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனையானது. முதல் நாள் கார்பரேட் நிறுவனங்கள் நடத்தும் திரையரங்குகளை தவிர்த்து பிற திரையரங்குகள் அனைத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் அதிகபட்சமான விலைக்கு டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
ரூபாய், 3000 முதல் குறைந்தபட்சம் 250 ரூபாய் வரை டிக்கெட் விலை இருந்தது. தமிழ்நாட்டில் ’ஜெயிலர்’ படம் முதல் நாள் சுமார் 24 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. நான்கு நாட்கள்(10,11,12,13) முடிவில் தமிழ்நாட்டில் சுமார் 81 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ஜெயிலர் , ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சுமார் ரூ.32 கோடியும், கேரளாவில் சுமார் ரூ.20 கோடியும், கர்நாடகாவில் சுமார் ரூ.26 கோடியும், வட இந்திய மாநிலங்களில் சுமார் ரூ.6 கோடியும், வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் இந்திய அளவில் 165 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த நான்கு நாட்களை போன்று பாக்ஸ் ஆபீஸ் வசூல் தொடரும்பட்சத்தில் வாரிசு படம் உலக அளவில் செய்த மொத்த வசூலான 310 கோடி ரூபாய், துணிவு செய்த மொத்த வசூலான 210 கோடி ரூபாய் என்கிற கணக்கை இந்திய மொத்த வசூலில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராமானுஜம்
நீட் தேர்வால என்ன சாதிக்க போறீங்க? – ஜெகதீஸ்வரனின் நண்பர் பேட்டி!
சுதந்திர தினம்: 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம்!
கொலை நகரமாக மாறும் நெல்லை: மீண்டும் தலை தூக்குகிறதா கூலிப்படை?