நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஷாக்கி செராப், ஷிவ ராஜ்குமார், மோகன்லால், சுனில், விநாயகன், வசந்த்ரவி, யோகி பாபு, மிர்னா என பல முக்கிய பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயிலர் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
கடந்த பத்தாண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்கள் லிங்கா(2014), கபாலி (2016), காலா(2018), 2.0 (2018), பேட்ட (2019), தர்பார் (2020) அண்ணாத்தே (2021) ஆகிய ஏழு படங்களும் வணிகரீதியாக பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றிபெறவில்லை. இருந்தபோதிலும் ரஜினிகாந்த் என்கிற நடிகருக்கான ரசிகர் கூட்டம் நான்கு தலைமுறை கடந்தும் உலகம் முழுவதும் குறையாமல் இருக்கிறது.
அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படத்தை முதல் நாளில் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம், ஆர்வம், வெறித்தனம் இன்றளவும் அவரது ரசிகர்களிடம் தொடர்கிறது. 2021 ஆம் ஆண்டு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்தே 18 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதே நிறுவனம் தயாரித்துள்ள படம் ஜெயிலர்.
முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் நேற்றைய தினம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாகவில்லை. அதனால் இயல்பாகவே ஜெயிலர் படத்திற்கு தென்னிந்திய மாநிலங்களில் 60% தியேட்டர்களுக்கு மேல் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு விநியோகஸ்தர்களுக்கு கிடைத்தது.
தென்னிந்திய மொழிகளில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் ஜெயிலர் படத்தில் நடித்திருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக அமைந்தது.
அதனால் கேரளாவில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் எனும் பெயரில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைத்துள்ளனர்.
சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்திருப்பதால் கர்நாடக மாநிலத்தில் சுமார் 1,097 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட்டது என ஜெயிலர் படத்தின் கர்நாடக விநியோகஸ்தர் ஜெய்யன்னா அறிவித்துள்ளார். இதுவரை ரிலீஸ் முதல் நாளில் அதிக காட்சிகளில் திரையிடப்படும் முதல் திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் இடம்பிடித்துள்ளது. கன்னடத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் இது சாத்தியமானது என்கின்றனர்.
தமிழ்நாட்டில் 815 திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் 1000 திரைகளுக்கு மேல் வெளியான எந்திரன் (2010) திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் மொத்தமாக 35 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இதனை இன்றளவும் அவரது நடிப்பில் வெளியான வேறுபடங்கள் முறியடிக்க முடியவில்லை. சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் எழுந்த பின் ஜெயிலர் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் மூலம் சாதனை நிகழ்த்தவேண்டும் என சன் பிக்சர்ஸ், ரஜினிகாந்த் தரப்பில் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா கழுகு கதையை கூறி பரபரப்பை ஏற்படுத்தியதால் ரஜினிகாந்த் ரசிகர்கள் தரப்பில் தன் எழுச்சி ஏற்பட்டதைக் குறிப்பிட்டாக வேண்டும். அதனால் தான் தமிழ்நாடு முழுவதும் ஜெயிலர் படம் திரையிட்ட திரையரங்குகளில் கட் அவுட், பாலாபிஷேகம் என அமர்க்களப்பட்டது. முதல் நாள் நகர்ப்புறங்களில் இருக்கும் முதல் தரமான திரையரங்குகளில் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனையானது. முதல் நாள் கார்பரேட் நிறுவனங்கள் நடத்தும் திரையரங்குகளைத் தவிர்த்துப் பிற திரையரங்குகள் அனைத்திலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் அதிகபட்சமான விலைக்கு டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக 3000 ரூபாய் முதல் குறைந்தபட்சம் 250 ரூபாய் வரை டிக்கட் விலை இருந்தது.
தமிழ்நாட்டில் ஜெயிலர் படம் முதல் நாள் சுமார் 24 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாளான இன்று நகர்ப்புறங்களைத் தவிர்த்துப் பிற இடங்களில் முன்பதிவு, வசூல் மந்தமாகவே உள்ளது என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
இராமானுஜம்
எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை? வானிலை மையம் தகவல்!
ஓபிஎஸ் தலைமையில் ஆகஸ்ட் 20-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!