“ஜெய் ஸ்ரீ ராம் தான் ஒலிக்கும்”: பதான் பற்றி கங்கணா

சினிமா

“இந்தியாவில் ஜெய் ஸ்ரீ ராம் என்பதே ஒலிக்கும்” என்று பதான் படத்தின் வெற்றியை விமர்சிக்கும் பதிவில் நடிகை கங்கணா ரனாவத் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பதான்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

வில்லனாக ஜான் ஆப்ரகாம், சிறப்பு தோற்றத்தில் நடிகர் சல்மான்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

ஷாருக்கான் நடிப்பில் நான்கு வருடங்களுக்கு பின் இந்தப்படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. அத்துடன் படத்தில் இடம் பெற்றுள்ள பேஷரம் ரங் பாடலில் நடிகை தீபிகா படுகோனே அணிந்திருந்த காவி உடை இந்துக்களை மலினப்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.

இதற்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உள்ளிட்ட பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர்.

இதற்கு நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்த ஷாருக்கான் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் சிலர் பேசுவதாக கூறினார். ஒரு கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படங்கள் பற்றி விமர்சிப்பதை தவிர்க்குமாறு தனது கட்சியினருக்கு அறிவுரை கூறிய நிலையில் பதான் சர்வதேச அளவில் தீவிர கவனம் பெற்றது.

இந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான பதான் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. கடந்த ஆண்டு  வெளியான பெரும்பான்மையான இந்தி திரைப்படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் பதான் படத்தின் வெற்றியை இந்தி திரை உலகமே கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் பதானின் வெற்றியை பற்றி குறிப்பிட்ட இயக்குநர் கரண் ஜோஹர் ‘வெறுப்பை வீழ்த்திய அன்புக்கு கிடைத்த வெற்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்  நடிகையும், பாஜக ஆதரவாளருமான கங்கணா ரனாவத் பதான் படம் குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்திருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

“பதான் திரைப்படம் ‘வெறுப்பை வீழ்த்திய அன்புக்கு கிடைத்த வெற்றி’ என்று குறிப்பிடப்படுகிறது. அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். யாருடைய வெறுப்பின் மேல் யாருடைய அன்பு?.. யாருடைய டிக்கெட்டுகளை வாங்கி வெற்றியடையச் செய்கிறார்கள் என்பதை சரியாகச் சொல்வோம்? அது அனைவரையும் உள்ளடக்கிய தன்மையோடு, 80 சதவீத இந்துக்கள் வாழும் இந்தியாவின் அன்பு ஆகும்.

பதான் படத்தில் நம்முடைய எதிரி நாடான பாகிஸ்தானையும், ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பையும் நல்ல முறையில் காட்டியுள்ளனர். வெறுப்பு மற்றும் எதிரிகளின் அற்ப அரசியலை வென்றது இந்தியாவின் அன்புதான். வெறுப்பு மற்றும் தீர்மானங்களுக்கு அப்பாற்பட்ட இந்தியாவின் இந்த ஆன்மாவே அதை மகான் ஆக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”பதான் ஒரு நல்ல திரைப்படமாக இருந்த போதிலும், இங்கு ஜெய் ஸ்ரீ ராம் என்பது மட்டுமே ஒலிக்கும். அத்துடன் என்னுடைய நம்பிக்கை என்னவென்றால், இந்திய முஸ்லீம்கள் தேசபக்தர்கள், ஆப்கானிஸ்தான் பதான்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள்.

இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தியா ஒரு போதும் ஆப்கானிஸ்தானாக இருக்காது. ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆப்கானிஸ்தான் நரகத்தை விட மோசமாக இருக்கிறது. ஆகவே அந்தக்கதைகளத்தின் படி பார்க்கும் போது, பதான் படத்திற்கு பொருத்தமான பெயர் ‘இந்திய பதான்’ என்பதே!” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, கங்கனாவை டிவிட்டரில் டிரோல் செய்த ரசிகர் ஒருவர், “கங்கனா ஜி உங்களின் ‘தக்கட்’ திரைப்படம் முதல் நாளில் 55 லட்ச ரூபாய் மற்றும் ஒட்டுமொத்தமாக ரூ.2.58 கோடிதான் வசூலித்தது.

‘பதான்’ படம் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பதானின் ஒருநாள் வசூல் கூட இல்லை உங்கள் படத்தின் ஒட்டுமொத்த வசூல். இது உங்களின் விரக்தியைத் தவிர வேறில்லை” என பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த கங்கனா, “ஆம், தக்கட் ஒரு வரலாற்று தோல்விதான். இதை நான் எப்போது மறுத்தேன்? பத்து வருடங்களில் ஷாருக்கானின் முதல் வெற்றிப் படம் இது. இந்தியா அவருக்கு வழங்கிய அதே வாய்ப்பு நமக்கும் வழங்கும் என்று நம்புகிறேன் ஜெய் ஸ்ரீராம்” என தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

ஹிண்டன்பெர்க் அறிக்கை: மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

’தலையாரி’ நியமனத்தில் விளையாடியது யார்? கொதிக்கும் தொண்டர்கள்… திணறும் அமைச்சர்கள்! அதிர்ச்சி ஆடியோக்கள்!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *