சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு மூளையாகதிமுக நிர்வாகி ஜாபர் சாதிக் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அக்கட்சியில் இருந்து நேற்று அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.
இவர் தான் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ மற்றும் இயக்குநர் அமீர் நடிப்பில் ‘இறைவன் மிகப் பெரியவன்’ ஆகிய படங்களை தயாரித்தும் வந்தார்.
இந்த நிலையில் ஜாபர் குறித்து இயக்குநர் அமீர் பரபரப்பு அறிக்கையை இன்று (பிப்ரவரி 26) வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.
எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.
நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.
அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்” என்று அமீர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘மார்ச் 15க்கு பிறகு Paytm FASTags வேலை செய்யாது!’ : மாற்றுவழிகள் இதோ!