”சினிமாவை ஆயுதமாக மாற்றியவர் கலைஞர் தான்”: சூர்யா
திரைப்படங்கள் வாயிலாக சமுதாயத்தில் பெரும் மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்ற டிரெண்டை முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான் என்று நடிகர் சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் தமிழ் திரையுலகினர் சார்பில் ’கலைஞர் 100’ விழா இன்று (ஜனவரி 6) நடைபெற்று வருகிறது.
அதில் பங்கேற்று நடிகர் சூர்யா பேசுகையில், “சினிமா என்பது ஒரு ஆயுதம். அதை முறையாக பயன்படுத்தினால் சமுதாயத்தில் பெரும் மாற்றத்தினை கொண்டுவர முடியும் என்ற டிரெண்டை செட் செய்தவர் கலைஞர். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமை என்று அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர் கலைஞர்.
அதேவேளையில் சினிமாவையும் தன் கை பிடித்து மேலே உயர்த்தி வந்தார். அவர் அரசியலை கலையாகவும், கலையை அரசியலாகவும் பார்த்தார். அதனால் தான் அவரை இன்றும் ஆசையாக, மரியாதையாக ’கலைஞர்’ என்று அழைக்கின்றோம். அவர் முதலில் படைப்பாளி. அப்படிப்பட்ட கலைஞருக்கு தமிழ் திரையுலகம் நூற்றாண்டு விழா எடுப்பதை முக்கியமான விழாவாக பார்க்கின்றேன்.
பராசக்தி படத்தில் கைரிக்ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். அதற்கு காவலர் ஒருவர் ‘நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்திக்காட்டேன்” என்று கூறுவார். பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டில் மனிதர்கள் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்தவர் கலைஞர்.
அவருக்கும் மற்றும் அவரது எழுதுகோலுக்கும் என்னுடைய மரியாதைகள். கலைஞரை சந்தித்து, ஆசீர்வாதம் வாங்கியுள்ளேன் என்ற முறையில் இந்த விழாவில் பங்கெடுத்துள்ளேன் என்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது” என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் 100 : ஒன்றுதிரண்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கம் என்ன? : டி.ஆர்.பி.ராஜா விளக்கம்!