ஐடி ரெய்டு: அன்புச்செழியனை தொடர்ந்து கமல், உதயநிதி?

Published On:

| By Kavi


இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் தமிழ் சினிமா பைனான்சியர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

தமிழ் சினிமாவில், தயாரிப்பு, வியாபாரம், திரையிடல் இவற்றை தீர்மானிக்கக் கூடியவர்களில் முதன்மையானவர் மதுரை ஜி.என்.அன்புச்செழியன். எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியுடன் நெருக்கமாக இருக்கக்கூடியவர்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் பொறுப்பு வகித்தவருமான பழனிமாணிக்கம் மூலம் மத்திய அரசுடன் நெருக்கமானார்.

ஆட்சி மாற்றம் காரணமாக அதனை தொடர முடியவில்லை. ஏற்கனவே பலமுறை இவரது மதுரை, சென்னை வீடு, அலுவலகங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் அன்புச்செழியனின் சென்னை வீடு, அலுவலகம்,சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்க வளாகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பன் மருமகனும், சத்யஜோதி பிலிம்ஸ் தலைவர் டி.ஜி.தியாகராஜன், நடிகர் சூர்யாவுக்கு நெருக்கமான உறவினர்களான டிரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்ட அலுவலகம், அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டுடியோ கீரின் நிறுவன அலுவலகம், அதன் தலைவர் ஞானவேல்ராஜா வீடு, நடிகர் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா, கலைப்புலி எஸ்.தாணு ஆகியோரது வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இது மட்டும் இன்றி அன்புசெழியன் சகோதரரும், சினிமா பைனான்சியருமான அழகர் சாமியின் சென்னையில் உள்ள அலுவலகம், வீடு, மற்றும் மதுரையில் உள்ள இவரது வீடு, திரையரங்க வளாகங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது வருமானவரித்துறை. தமிழ் சினிமாவில் சக்திமிக்க விநியோகஸ்தரான வேலூர் எஸ்.பிக்சர்ஸ் சீனிவாசன் அலுவலகம், வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளது.

கமல் உதயநிதி தொடர்புடைய இடங்களில் சோதனை?
இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ், கமல்ஹாசனின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களிலும் வருமானவரித் துறை சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி மதுரை அன்புச்செழியன் பினாமிகளான சேலத்தில் அரும்பு, மதுரையில் விநியோகஸ்தர் ஆனந்தாமணி ஆகியோர் வருமானவரித் துறையினரால் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களின் வீடுகளிலும் சோதனை இருக்கலாம் என கூறப்படுகிறது.
அம்பலவாணன்

அன்புச்செழியன் கலைப்புலி தாணு: அடுத்தடுத்து தொடரும் ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share