”வரலாற்று நிகழ்வுகளை ஆழமாக ஆய்வு செய்வதற்கு முன் அவற்றை பற்றி கருத்து தெரிவிப்பது உணர்ச்சியற்றது மற்றும் ஆணவமானது” என்று இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் தெரிவித்துள்ளார்.
கோவா சர்வதேச திரைப்பட விழா கடந்த நவம்பர் மாதம் 20-ஆம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இந்த திரைப்பட விழாவில் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.
இந்தப் படமானது, 1980 மற்றும் 90-களில் காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்டதைக் கதைக் கருவாக கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவில் பேசிய தேர்வுக் குழு தலைவர் நதவ் லாபிட், “காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம்” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இந்தியா முழுவதும் பேசுபொருளானது.
தேர்வுக் குழு தலைவர் நதவ் லாபிட்டின் கருத்துக்கு இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் நார் கிலோன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் உண்மையில் நடந்தது.
அதில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதற்கான உணர்வை அனுபவித்து வருகிறார்கள்.
இந்திய கலாச்சாரத்தில் விருந்தாளியை கடவுள் என்று கூறுகிறார்கள். கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நீங்கள் தேர்வுக்குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் துஷ்பிரயேகம் செய்துள்ளீர்கள்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பற்றி நீங்கள் கூறிய கருத்துக்களை நான் கண்டிக்கின்றேன். அதில் எந்த நியாமும் இல்லை.
மற்ற நாடுகளின் மீதான உங்களது விரக்தியை பிரதிபலிக்க வேண்டாம். நீங்கள் தைரியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு சென்று அறிக்கை விடுவீர்கள். இஸ்ரேலிய பிரதிநிதிகளான நாங்கள் இங்கு தான் இருக்க வேண்டும். உங்களது பேச்சால் எனது சமூக வலைதளப் பக்கங்களின் இன்பாக்ஸ்கள் நிரம்பி வழிகிறது.
இந்தியா மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு இடையிலான நட்பு மிகவும் வலுவானது. நீங்கள் ஏற்படுத்திய சேதத்திலிருந்து அந்த நட்பு விரைவில் நலம்பெறும். காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தைப் பற்றி நீங்கள் பேசியதற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தூதர் நார் கிலோன் பதிவை மேற்கோள் காட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,
“உங்களது வார்த்தைகளுக்கு நன்றி. நம் நாடுகளுக்கு இடையே உள்ள பந்தம், இது போன்ற ஒரு தவறான சம்பவம் நடந்துள்ளதால், நமது நட்பை சீர்குலைக்கும். வரலாற்றை கற்காதவர்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்வார்கள்.
அதனால் தான் ஷிண்டர்ஸ் லிஸ்ட் மற்றும் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் முன்பை விட நம்மை அதிகமாக இணைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
விஜயபாஸ்கர் வங்கிக் கணக்கு: வருமானவரித் துறைக்கு உத்தரவு!
முடிவுக்கு வரும் முதற்கட்ட பிரச்சாரம்: களைகட்டும் குஜராத் தேர்தல்!