அரசியலில் அதிரடி பிரச்சாரம், இம்சை அரசன் 23 ம் புலிகேசி படப்பிரச்சனை போன்ற காரணங்களால் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்காமல் இருந்து வந்தார்.
தற்போது அவர் பல படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.
சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடித்து வருகிறார். மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு நேற்று இரவு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அடுத்து வரும் திரைப்படங்கள் என்ன?
இப்போ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்துல நடிச்சுட்டு இருக்கேன். அடுத்து, மாமன்னன், சந்திரமுகி 2 மற்றும் விஜய்சேதுபதியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து இருக்கு
மாரி செல்வராஜின் மாமன்னன் எப்படி இருக்கிறது?
மாமன்னன் திரைப்படத்தில குணசித்திர கதாப்பாத்திரத்தில் நடிச்சுட்டு இருக்கேன். நல்ல கதை. படம் அருமையா வந்துட்டு இருக்கு. அதுல நடிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு
போண்டா மணி உடல்நிலையை பத்தி..
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரார்னு கேள்விப்பட்டேன். நல்ல மனிதர். போண்டா மணிக்கு உதவி செய்வேன்.
மறுபடியும் அரசியலுக்கு வருவீங்களா?
அரசியல் எதுக்குப்பா? முதலில் சினிமாவுல நடிப்போம் மக்களை சிரிக்க வைப்போம். அரசியலை அப்புறம் பாப்போம். தமிழ்நாடு அரசின் ஆட்சி இப்போ நல்லாருக்கு.
உங்க கூட நடிச்ச காமெடி நடிகர்களுக்கு இப்போது வாய்ப்பில்லையே?
முன்னாடி படங்கள்ல நகைச்சுவை டிராக்குகள் தனியா இருந்துச்சி. ஆனா இப்போ தனியா காமெடி டிராக்கே கிடையாது.
இப்போ யாரும் முன்ன மாறி பண்றதில்ல. நானும் இயக்குநர்கள் கிட்ட போய் சொல்ல முடியாது. நானே இப்போ கதையோட தான் நடிச்சிட்டு இருக்கேன்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பொறுமையாக பதிலளித்தவர், பின்னர் பொதுமக்களுடன் செல்பி எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா