பிரபாஸ் உடன் போட்டியிடுகிறாரா சிவகார்த்திகேயன்?

Published On:

| By christopher

is sivakarthikeyan going to fight with prabhas

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அந்தப்படத்துக்கு முன்பாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் அயலான். சிவகார்த்திகேயன், ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடிப்பில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் அயலான் படத்தை இயக்குகிறார். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு நீரவ்ஷா, இசை ஏ.ஆர்.ரகுமான்.

கொரோனா உட்பட பல காரணங்களால் அயலான் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி ஒரு வழியாக  இவ்வாண்டு தீபாவளியையொட்டி படம்வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் தொடர்பான வேலைகள்  நடந்துவந்தது. கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் பேந்தம் நிறுவனம், படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் வேலைகள் இருக்கின்றன.

எங்கள் நிறுவனத்தைத் தாண்டி வெளியில் வேலை கொடுத்து வாங்கினால் கூட தீபாவளிக்குள் அயலான் பட வேலைகளை முடிக்க முடியாது என்று தயாரிப்பு தரப்புக்கு தகவல் கூறியிருக்கிறார்கள்.

அதனால் அயலான் படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் தயாரிப்பு தரப்பினர் உள்ளனர்.

எப்போது அயலான் திரைக்கு வரும் என கேட்டால் டிசம்பருக்குள் படத்தை முடிக்கவியலாது. எனவே 2024 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட வாய்ப்பு இருக்கிறது. அதிலும் ஒரு சிக்கலை அயலான் படம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

செப்டம்பர்மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பிரபாஸ் பிரசாந்த் நீல் கூட்டணியில் தயாரான சலார் படத்தின் வெளியீடும் தள்ளிப்போயிருக்கிறது. அந்தப்படமும் 2024 பொங்கலின் போது வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப்படம் வந்தால் தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களில் அயலானுக்கு தேவையான திரையரங்குகள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்படும்.

தமிழகத்தை தாண்டி பிற மாநில சினிமா ரசிகர்களின் முதல் தேர்வாக சாலார் இருக்கும். அதனால் அயலான் படத்தின் வசூல் பாதிக்கப்படக்கூடும் என்கின்றனர்.

இதனால் அயலான் படத்தை எப்போது வெளியிடுவது என்கிற குழப்பம் நீடிக்கிறது.

இராமானுஜம்

ஜி-20 மாநாடு: நாளை முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை!

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் ஃப்ரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel