உதய் பாடகலிங்கம்
ஒரு பிரபலம் தான் இருக்கும் நிலம் தாண்டி, வேறொரு பகுதியில் கால் பதிப்பது தவிர்க்க முடியாதது.
அங்கிருக்கும் மக்களும் தனது திறமையை ரசிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது மனித இயல்பு. திரைப்படக் கலைஞர்களைப் பொறுத்தவரை அது ஒரு வாடிக்கையான விஷயம். அந்த வகையில், தொண்ணூறுகளில் ‘மௌனம் சம்மதம்’ படம் வழியே தமிழில் அறிமுகமானது முதல் இன்றுவரை நடிகர் மம்முட்டியின் படங்கள் தொடர்ச்சியாகத் தமிழ் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன.
அதற்கேற்றவாறு அவரும் தனது தனித்துவத்தை நிரூபிக்கும் பாத்திரங்களை மட்டுமே தமிழில் ஏற்கிறார். அந்த வகையில், ‘பேரன்பு’ படத்திற்குப் பிறகு மம்முட்டியின் மீது ஈர்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.
மம்முட்டியின் 17வது படமா?
1980இல் ஒரு நடிகராகத் திரையில் அறிமுகமான மம்முட்டி, அதற்கு முன்னர் ஓரிரு மலையாளப் படங்களில் தலைகாட்டியவர். சத்யன், மது, பிரேம் நசீர் என்று புகழ்மிக்க நடிகர்கள் பலர் இருந்தாலும், எண்பதுகளில் ஜெயன் மட்டுமே மலையாளத் திரையுலகில் ‘சூப்பர்ஸ்டார்’ அந்தஸ்தைப் பெற்றார்.
அவரது அகால மரணத்திற்குப் பிறகு, நட்சத்திர நடிகர் என்ற புகழைப் பெறுவதற்கான வாய்ப்பு எம்.ஜி.சோமன், நெடுமுடி வேணு, ரதீஷ் உட்படப் பலருக்கு வாய்த்தது. ஆனால், அதற்கடுத்த பத்தாண்டுகளில் மம்முட்டியும் மோகன்லாலும் மட்டுமே அந்த பீடத்தை அடைந்தனர்.

குறிப்பாக, 1984 முதல் 1990 வரை நாயகன் மட்டுமல்லாமல் குணசித்திர பாத்திரங்களிலும் நடித்து மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றார் மம்முட்டி. கமர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல் மாற்று சினிமாவை நேசித்த இயக்குனர்களின் படைப்புகளிலும் இடம்பிடித்தார்.
எப்படி எண்பதுகளில் ரஜினியும் கமலும் இந்திப்படங்களில் நடித்தார்களோ, அதேபோல தொண்ணூறுகளில் தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் மம்முட்டி. அவர் அறிமுகமான ‘மௌனம் சம்மதம்’ மட்டுமல்லாமல் ’அழகன்’, ‘தளபதி’, ’கிளிப்பேச்சு கேட்க வா’, ‘மக்கள் ஆட்சி’, ‘புதையல்’, ‘அரசியல்’, ’மறுமலர்ச்சி’, ‘எதிரும் புதிரும்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகியவற்றில் அவரது பாத்திரங்களே, அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணத்தைச் சொல்லும். நிச்சயமாக, அது போன்ற பாத்திரங்களை மலையாளத்தில் மம்முட்டி ஏற்றதில்லை.

2001இல் வெளியான ‘ஆனந்தம்’, இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத படம். அதற்கடுத்த ஆண்டு வெளியான ‘கார்மேகம்’ படத்தில் வடிவேலு உடன் மம்முட்டி நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். ஜூனியர் சீனியர், விஸ்வ துளசி, வந்தே மாதரம் படங்களை அடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகே இயக்குனர் ராமின் ‘பேரன்பு’ படத்தில் நடித்தார். அப்பாத்திரமும் கூட அவரது இருப்பினால் மட்டுமே ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது.
இதுவரை 16 தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் மம்முட்டி. லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்கியிருக்கும் ’நண்பகல் நேரத்து மயக்கம்’ விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனை மம்முட்டியின் 17ஆவது தமிழ் படம் என்பதா அல்லது 16 ½ படம் என்று சொல்வதா என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், இப்படத்தில் மலையாளமும் தமிழும் கிட்டத்தட்ட சரிபாதி அளவில் இடம்பெற்றுள்ளது.
திரைப்பட விழா கோலாகலம்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச கேரள திரைப்பட விழாவில் இரண்டு முறை திரையிடப்பட்டபோதும், பெரும் வரிசையில் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். பல ரசிகர்கள் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்தைக் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர். அதுவே, இப்படம் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது என்று உணர்த்தும். அப்படிப் படம் பார்த்தவர்களில் பலரும் இதனை ‘ஆஹா’, ‘ஒஹோ’ என்று சமூகவலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

அப்படியென்ன கதை இதில் இருக்கிறது?
கேரளாவைச் சேர்ந்த சிலர் வேளாங்கண்ணிக்குப் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். திரும்பிச் செல்லும் வழியில், பழனி அருகே ஒரு கிராமத்தைக் கண்டதும் பேருந்தில் இருந்து இறங்குகின்றனர். சக பயணிகள் எல்லாம் ஓய்வெடுக்க, ஜேம்சன் என்பவர் மட்டும் அந்த பகுதியைச் சுற்றித் திரிகிறார். அப்போது, அக்கிராமத்தில் வாழ்ந்த சுந்தரம் என்ற நபரைப் பிரதியெடுத்தது போல நடந்து கொள்கிறார்.
முன்பின் தெரியாத ஒருவரைப் போல, ஜேம்சன் நடந்துகொள்ளக் காரணம் என்ன? சுந்தரத்திற்கும் ஜேம்சனுக்கும் என்ன சம்பந்தம்? மிக முக்கியமாக, மலையாளியான ஜேம்சன் அக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழரைப் போல பாவனைகளை வெளிப்படுத்துவது எப்படி? இந்த கேள்விகளே ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைக்கதையாக விரிவதாகச் சொல்கின்றனர் ஏற்கனவே படம் பார்த்த ரசிகர்கள். இதில் ஜேம்சனாக நடித்துள்ளார் மம்முட்டி.
இப்படி ஒரு கதையில் மம்முட்டி நடிக்கும்போது தானாகவே நகைச்சுவை பிறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

சிட்டி ஆஃப் காட், ஆமென், டபுள் பேரல் போன்ற படங்களை இயக்கியபோதும், 2017இல் வெளியான ‘அங்கமாலி டயரீஸ்’ படமே இயக்குனர் லிஜோ ஜோஸ் பெலிசேரியை இந்தியா முழுக்கப் பிரபலமானவனராக ஆக்கியது. அதன்பிறகு ‘ஏ மா யு’, ’ஜல்லிக்கட்டு’, ‘சுருளி’ படங்களுக்குப் பிறகு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ தந்திருக்கிறார். இதற்கடுத்து மோகன்லாலுடன் இணைந்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை தரவிருக்கிறார் லிஜோ.
வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைக் கொடுக்கும் லிஜோ போன்ற இன்றைய தலைமுறை இயக்குனர் உடன் மம்முட்டி கைகோர்த்திருக்கிறார் என்பதுவே இப்படம் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பிற்கான காரணம்.
71 வயது சிங்கம்!
கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புலகில் நீடித்துவரும் மம்முட்டிக்கு தற்போது 71 வயதாகிறது. மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளோடு நெருக்கம் பாராட்டினாலும், இன்றுவரை தன்னைக் கட்சி சார்பற்றவராகவே பொதுவெளியில் அடையாளப்படுத்தி வருகிறார். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் வெற்றிகரமான இளம் நடிகராகப் புகழ் பெற்றிருக்கிறார்; மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
மேற்கண்ட தகவல்களோடு மம்முட்டியின் புகைப்படத்தைப் பார்க்கும் ஒரு ரசிகருக்கு, அவரது இளமை மீது நிச்சயம் பொறாமை வரும். கோவிட் -19 காலத்தில் அனுபவித்த ஓய்வு மட்டுமே, அவரது முகத்தில் சுருக்கங்களைத் தந்திருக்கிறது. அப்போதும் தொடர்ச்சியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், அதுவும் கூட இல்லாமல் போயிருக்கும். அந்தளவுக்கு இடைவிடாமல் இளமைப்பொலிவுடன் தொடர்ந்து திரையுலகில் இயங்கி வரும் மம்முட்டி, திரைப்படக் கலை தாண்டி தன் வாழ்வில் பல அம்சங்களை ரசனையோடு எதிர்கொண்டு வருபவர். அரிதாகப் பொதுவெளியில் அவர் பகிரும் கருத்துகள் கூட, புதிய திசை நோக்கி நகரும் தன்மை கொண்டவை.

இப்படிப்பட்ட மம்முட்டி, இந்த ஓடிடி யுகத்திலும் புழு, ரோர்சாக் போன்ற வித்தியாசமான காட்சி அனுபவம் தரும் படங்களில் நடித்து வருவது சிறப்புக்குரியது. அந்த வகையிலேயே ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர் ரசிகர்கள்.
அனைத்தையும் தாண்டி மம்முட்டியின் தமிழ் ரசிகர்களில் ஒருவரான நானும் அப்படத்தை எதிர்நோக்க ஒரு காரணம் உண்டு. தமிழ் படங்களில் நடித்தாலும், மம்முட்டியின் வசன உச்சரிப்பில் வெகு நுட்பமாகக் கவனித்தால் மட்டுமே மலையாள வாசனை தெரியும். அந்த அளவுக்கு வெகு இயல்பாக தமிழ் பேசுவது போலவே அவரது குரல் ஒலிக்கும். சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்பது மட்டுமே அதற்குக் காரணமாக இருக்கும் என்பதை ஏற்றுகொள்ள முடியாது.
அதையும் தாண்டி, ஒரு தமிழ் நடிகர் இந்த வசனத்தைப் பேசினால் எப்படியிருக்கும் என்று மனதுக்குள் யோசித்து, அவ்வரிகளை அசை போட்டு, ஒரு ‘மிமிக்ரி’ கலைஞன் போல அதனை மம்முட்டி வெளிப்படுத்துகிறார் என்பதே எனது உத்தேசம். அது சரியா தவறா என்பதற்கான பதில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் கிடைக்கக்கூடும். அதுவே அப்படத்தின் ஆதார இழையாகவும் இருக்கக்கூடும்.
அனல்பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதல்வரின் காரை வென்ற சித்தர்!