சினிமாத் துறைக்கு வருவது கடினமான விசயம், தொடர்ந்து முயற்சி செய்தால் மட்டுமே வர முடியும் என்று மதுரையில் நடைபெற்ற கோப்ரா திரைப்பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகவுள்ள நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.
இதனையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மீனாட்சி, மிர்னாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி, ஆகியோர் பங்கேற்றனர்.
நடிகர் விக்ரம் வருகைக்காக ஏராளமான மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் காத்திருந்தனர். இதனையடுத்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவியர்களின் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் நடிகர் விக்ரம் மேடைக்கு வந்தார்.
மதுரைன்னாலே ருசியான உணவு தான்!
தொடர்ந்து விக்ரம் பேசுகையில், “மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் மீசை தானாகவே மேலே சென்றுவிட்டது. துருவ் விக்ரம் அனைவருக்கும் ’ஐலவ்யூ’ சொல்ல சொன்னார், மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும். எனது அப்பா படித்தது அமெரிக்கன் கல்லூரி தான். நான் கல்லூரி படித்துகொண்டிருந்தபோது மதுரைக்கு அடிக்கடி வருவேன்.
மதுரை என்றாலே நல்ல ருசியான உணவும், ஜாலியும் தான், மதுரை அமெரிக்கன் கல்லூரி குறித்து இயக்குனர் அமீர் அடிக்கடி என்னிடம் பேசுவார்.
ஹவுஸ்புல் பட சூட்டிங்கின் போது மதுரைக்கு வந்த நான் மதுரை பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டேன். சுவையான வகை வகையான உணவுகளை சாப்பிட்டேன். இன்று நான் டயட்டில் இருந்தாலும் கூட மதுரை ஸ்பெசல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன். அவ்வளவு ருசியாக இருந்தது.
கோப்ரா எப்படி இருக்கும்?
அந்நியன் திரைப்படம் போன்று சண்டை, காதல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ள படமாக கோப்ரா இருக்கும். மதுரைக்காரர்களுக்கு சினிமா என்றாலே வெறி தான் போல் என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வளவு வரவேற்பு தருகிறார்கள்.” என்றார்
சினிமாவிற்கு வருவது மிக கடினம்!
இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கேள்விக்கு நடிகர் விக்ரம் பதிலளித்தார்.
உங்களுடைய பேவரைட் படம் எந்த படம் என்ற ரசிகரின் கேள்விக்கு, தனது பேவரைட் கோப்ரா தான் என்றார்.
தொடர்ந்து மற்றொரு ரசிகர் நீங்க அப்பா செல்லமா, அம்மா செல்லமா? என்று கேட்ட கேள்விக்கு, ”நான் எப்போதும் ரசிகர்களின் செல்லம் தான்” என்றார்.
சினிமாவிற்கு வருவது கடினமா? எளிதா? என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த நடிகர் விக்ரம், ”சினிமாவிற்கு வருவது மிகுந்த கடினமானது இருந்தாலும் விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வரலாம்.” என்றார்.
தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார் விக்ரம். முன்னதாக திருச்சி ஜோசப் கல்லூரியிலும் மாணவர்களை சந்தித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மாணவர்களுக்கு சீயான் விக்ரம் சொன்ன சீக்ரெட் மந்திரம்!