சிறந்த பாடல், சிறந்த ஆவணப்படம் மற்றும் சிறந்த ஆவண குறும்படம் என்ற 3 பிரிவுகளில் இந்திய திரைப்படங்கள் இன்று (மார்ச் 13) நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் 95-வது ஆஸ்கார் விருது விழா இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்க உள்ளது.

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த விழா நேரடி ஒளிப்பரப்பாக உள்ளது. இந்தியாவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் இதனை காண முடியும்.
ஆஸ்கர் விருது நேரடி ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமின்றி சிறந்த பிறமொழி திரைப்படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளை சேர்ந்த படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியா சார்பில் இதுவரை எண்ணற்ற படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் அமீர்கான் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான லகான் திரைப்படம் மட்டுமே ஆஸ்கரின் இறுதி சுற்றை எட்ட முடிந்தது. எனினும் ஆஸ்கர் மேடையில் ஒரு நேரடி இந்திய திரைப்படம் இதுவரை விருது வென்றதில்லை.

2008ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஹாலிவுட் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார்.
எனினும் இதுவரை நடந்தவற்றை விட இந்தாண்டு நடைபெறும் 95வது ஆஸ்கர் விருது விழா இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சார்பில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், மரகதமணி இசையமைப்பில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’(Nattu Nattu) பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் இறுதிச்சுற்று நாமினேஷனில் இடம்பிடித்துள்ளது.
அத்துடன் ஆல் தட் பிரீத்ஸ் ( All That Breathes) ஆவணப்படமும், தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers) ஆவண குறும்படமும் இந்த முறை ஆஸ்கர் போட்டியில் இறுதிச்சுற்று நாமினேஷன் பட்டியலில் உள்ளது.
இவற்றில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்து திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே வென்றுள்ளதால் ஆஸ்கர் விருது இந்த பாடலுக்கு நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவினை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். மேலும் இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்நிகழ்ச்சியில் விருது வழங்குபவர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
மதுரை சம்பவம் – எடப்பாடி மீது வழக்கு: அடுத்து என்ன?
”நெடுஞ்சாலையை ஏன் திறந்து வைத்தார்”: பிரதமரை சாடிய காங்கிரஸ்!