பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் மெகா ஹீரோக்களையும் தயாரிப்பாளர்களையும் அலறவிட்டனர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற கோஷ்டியினர்.
மெகா ஹீரோக்களின் படங்கள் ரிலீசாவதற்கு முதல் நாளே 5.0 ஹெ.டி.யில் திருட்டு சிடியை ரிலீஸ் பண்ணும் பணியைச் செய்து வந்தனர். இப்போதும் தமிழ் ராக்கர்ஸின் அட்டகாசம் ஒழிந்தபாடில்லை.
அமேசான், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லைவ் போன்ற கார்ப்பரேட் ஓடிடி பிளாட்பார்ம்களை குறி வைத்து அட்டாக் பண்ணி வருகிறார்கள்.
இதற்கு லேட்டஸ்ட் உதாரணம், கடந்த வாரம் (ஆக.12-ல்) டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீசான அமலாபால் ஹீரோயினாக நடித்து தயாரித்த ‘கடாவர்’ படத்தை ஆக.11ஆம் தேதியே டவுன்லோடு பண்ணி நெட்டில் ரிலீஸ் செய்து கார்ப்பரேட்டுகளையே கதறவிட்டார்கள்.
இப்படிப்பட தமிழ் ராக்கர்ஸ் குரூப் எங்கிருந்து ஆப்ரேட் பண்ணுகிறது என்பதை தமிழ் சினிமாவின் பெரும்புள்ளிகளால் இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்த நேரத்தில் தான் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற பெயரிலேயே எட்டு பாகங்களைக் கொண்ட வெப்சீரிசை தயாரித்து சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸ் பண்ணியிருக்கிறது மிகப் பெரிய பாரம்பரியம் கொண்ட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்.
ரஜினி-ஷங்கர் காம்பினேஷனில் ரிலீசான ‘சிவாஜி’க்குப் பிறகு சினிமாவே தயாரிக்காத ஏவிஎம் இந்த தமிழ் ராக்கர்ஸ் மூலம் வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கியிருக்கிறது.
ஏவிஎம் சரவணனின் மகன் எம்.எஸ்.குகனின் வாரிசு (அதாவது சரவணனின் பேத்தி) பேரில் தயாரான இந்த வெப்சீரிசை, அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற படத்தை டைரக்ட் பண்ணிய அறிவழகன் டைரக்ட் செய்துள்ளார்.
அருண் விஜய் தான் இந்த வெப்சீரிஸின் ஹீரோ. ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன் ஹீரோயின்கள்.
தமிழ் ராக்கர்ஸின் டேஞ்சரஸ் நெட் ஒர்க்கை ஓரளவு கரெக்டாக பதிவு செய்துள்ள அறிவழகன், ‘குளோபல் ஸ்டார்’ அஜய், ‘அதிரடி ஸ்டார்’ ஆதித்யா என்ற இரு கேரக்டர்களை காட்டுகிறார்.
குளோபல் ஸ்டார் அஜய் என்பது அஜீத்தை ஞாபகப்படுத்துகிறது. அதிரடி ஸ்டார் யாருன்னா நம்ம விஜய் தான்.
குளோபல் ஸ்டாரை ஒரே ஒரு சீனில் காட்டிவிட்டு, படம் முழுக்க அதிரடி ஸ்டாரையும் அவரது அப்பா ( எஸ்.ஏ.சி.)வையும் ஏழு பாகங்களில் காட்டியிருக்கிறார் அறிவழகன்.
ரசிகர்களை நோக்கி இடது கையை லேசாகத் தூக்கி ஆட்டுவது, நடப்பது என அச்சு அசல் விஜய்யின் மேனரிசத்தை பேக்ஷாட்டில் காட்டி தெறிக்கவிட்டிருக்கிறார் அறிவழகன். இனிமே இப்படித்தான் எனச் சொல்ல வருகிறதோ ஏவிஎம்.?
தமிழ் ராக்கர்ஸ் : பைரசியை முடிவுக்கு கொண்டு வருவாரா அருண் விஜய்