தமிழ் திரையுலகத்தால் இன்று (ஜனவரி 6) மாலை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாபெரும் கலைவிழா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவுக்காக இன்று நாளிதழ்களில் வந்த விளம்பரங்களில் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்களின் படம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் இவ்விழாவுக்கு வரும் நட்சத்திரங்கள் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தினரிடம் பேசினோம்.
“ யார் எல்லாம் வருவார்கள் என்பது இப்போதுவரை உறுதியாகவில்லை. வருகிற அனைவருமே கலைஞர் மீதான மரியாதை, பாசம் காரணமாகத்தான் வருகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேநேரம் விழாவுக்கு வரும் நட்சத்திரங்களின் தற்போதைய தொழில் ரீதியான சூழலும் அவர்களின் வருகைக்கோ, வராததற்கோ காரணமாக இருக்கும்.
அந்த வகையில் உதயநிதியுடனான வியாபார தொடர்பு, எதிர்கால அரசியல் காரணங்களுக்காக கமல்ஹாசன், சன்பிக்சர்ஸ், லைகாவுடனான பட தயாரிப்பு உறவு காரணமாக ரஜினிகாந்த் இருவரும் விழாவுக்கு உறுதியாக வருவார்கள்.
பிற நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தையே மதிப்பதில்லை. படமே எடுக்காத தயாரிப்பாளர்கள் பொறுப்பில் இருக்கும் நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கு நட்சத்திர நடிகர்கள் செவி சாய்ப்பார்கள் என்பதற்கு உத்திரவாதமில்லை.
இது போன்ற விழாக்களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத்குமார், விஜய் இந்த நால்வரும் கலந்துகொண்டு விழாவை கலகலப்பாக்குவதும், அதன் காரணமாக தொலைக்காட்சி உரிமைக்கு அதிக விலை கிடைப்பதும் இது வரை நடந்த ஒன்று.
ஆனால் இப்போது அஜீத்குமார் வெளிநாட்டில் உள்ளார். விழா சம்பந்தமாக விஜய்யை இதுவரை யாரும் சந்தித்து பேசாத நிலையில் அவர் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
விழாவையொட்டி இரண்டு நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், விழாவிற்கு நடிகர், நடிகைகள் வருவதற்கான எந்த முயற்சியும், முன் ஏற்பாட்டையும் தென் இந்திய நடிகர் சங்கம் செய்யவில்லை. அதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், திரைப்பட இயக்குநர்கள் பிரதான விருந்தினர்களாக இருப்பார்கள் என்பதே தற்போதைய நிலவரம்” என்கின்றது தயாரிப்பாளர்கள் வட்டாரம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– அம்பலவாணன்
பூர்ணிமா பிக்பாஸில் சம்பாதித்த… மொத்த தொகை எவ்வளவு தெரியுமா?