இரவின் நிழல் படத்தில் நடிகை பிரிகிடா நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்தது எதற்காக என்று விளக்கம் அளித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் இன்று (ஜூலை 15) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் உலகின் முதல் “ நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படம் ஆகும். இந்த படம் மூன்று சர்வதேச விருதுகளையும் இரண்டு பரிந்துரைகளையும் பெற்றுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்துள்ளார். பிரிகிடா ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமானார். அவற்றையெல்லாம் விட இரவின் நிழல் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார் பிரிகிடா. ஏன் அவ்வாறு நடித்தேன் என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
”சேலை கட்டினாலே சரியாக இருக்கிறதா என்று பல முறை சரி பார்க்கும் பெண் தான் நான். ஆனால் படத்தில் அந்த கதாபாத்திரம் மிகவும் புனிதமானது. அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது இவ்வாறு நடித்தால் தான் அந்த கதாபாத்திரம் முழுமையடையும் என்று பார்த்திபன் சார் எனக்கு புரிய வைத்தார்.

ஆனால் இதனை எனது பெற்றோரிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு ஒரு பெரிய நெருடலாகவே இருந்தது. எனது கதாபாத்திரத்தை விளக்கி சொல்லிவிட்டு இறுதியாக இப்படி ஒரு காட்சியும் இருக்கிறது என்று கூறினேன். பார்த்திபன் சாரும் எனது பெற்றோரிடம் பேசினார். அவர்கள் சம்மதம் தெரிவித்த பிறகு அந்த காட்சியானது வெற்றிகரமாக படமாக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
மேலும் நடிகை பிரிகிடா இரவின் நிழல் படத்தில் முதலில் துணை இயக்குநராக பணி புரிவதாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்கு பலரை நேர்முகத் தேர்வில் ஈடுபடுத்தியுள்ளார். பிறகு இவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்ததாக கூறியுள்ளார். இந்த வாய்ப்பு தனக்கு இவ்வளவு எளிதாக கிடைக்கும் என்று தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், இப்படி ஒரு வாய்ப்பை அளித்த பார்த்திபனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மோனிஷா