இரவின் நிழல்: அமேசான் பதிவும் பார்த்திபன் விளக்கமும்!

சினிமா

பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்து வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில் வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ருத், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

உலக அளவில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக இந்தப் படம் தயாரிக்கபட இருப்பதாக பார்த்திபன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

64 ஏக்கர் நிலப் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர மற்றும் நகரக் கூடிய அரங்கில் இரவின் நிழல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இரண்டு பிரம்மாண்டமான விழாக்கள் தயாரிப்பு தரப்பில் இருந்து நடத்தப்பட்டது. படம் வெளியான பின்பு சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் படம் வெளியான திரையரங்குகளுக்கு படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுடன் நேரில் சென்றார் பார்த்திபன்.

இரவின் நிழல் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் பார்த்திபனின் முயற்சியை வியந்து பாராட்டினார்.

மேலும், இந்தப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் பார்த்திபனின் மிகப்பெரும் முயற்சி என்று பாராட்டு பத்திரம் வாசித்தார்கள் .

அந்த நிலையில் ” இரவின் நிழல்” உலகின் முதல் நான் லீனியர் படம் இல்லை, பார்த்திபன் பொய் சொல்கிறார் என்று திரைப்பட விமர்சகர்” புளு சட்டை மாறன்” ஆதாரங்களுடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டார்.

இதனை பார்த்திபன் மறுத்து பதில் கூற ஊடகங்களில் பரபரப்பு செய்தியானதுடன் ஒரு கட்டத்தில் சண்டையாகவும் மாறியது. வணிகரீதியாக திரையரங்குகளில் படம் வெற்றிபெறவில்லை

96 நிமிடங்கள் படத்தை ஒரே டேக்கில் உருவாக்கியுள்ள பார்த்திபன், படத்தின் முதலில் 30 நிமிடம் படம் உருவான மேக்கிங் வீடியோவை ஒளிப்பரப்பினார்.

இதனால் படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்குவதற்கு எந்த சேனலும் ஆர்வம் காட்டவில்லை ஓடிடி தளங்களும் படத்தை வேண்டாம் என்று மறுத்து வந்தனர்.


தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘இரவின் நிழல்’ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தை அமேசான் ப்ரைம் மற்றும் ஐஎம்டிபி தளங்களில், உலகின் இரண்டாவது நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என குறிப்பிட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் தளத்தில் இப்படத்தை க்ளிக் செய்து ஓபன் செய்தால், படத்தின் தொடக்கத்தில் ட்ரிவியா (Trivia) என்ற தகவல் பிரிவில், “உண்மை என்னவென்றால், இது உலகத்தின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம். இதன் இயக்குநர் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்பான ரசிகர்களுக்கு.. பணிவான வணக்கம். ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்பதில் எந்த ஐயமுமில்லை.

அந்தப் பெருமையுடன் மட்டுமே இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. அந்தப் பெருமைக்காக மட்டுமே மிகப்பெரிய பொருட்செலவில் 3 வருடம் என்னைப்போன்ற ஒரு சின்சியரான கலைஞனுடைய வாழ்க்கையை பணயம் வைத்து எடுக்கப்பட்ட படம்.

இந்தப் படம் முதல் படமா? இரண்டாவது படமா? என்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

தயவு செய்து அனைவரும் இந்தப் படத்தை பாருங்கள். முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்க்ரீன் ஷாட்டுகளை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், ‘வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும்’ என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
அமேசான் பிரைம் தளத்தில் “இரவின் நிழல்” சம்பந்தமாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலால் இப்படத்தை வானளாவ புகழ்ந்த ரஜினிகாந்த் முதல் கின்னஸ் சாதனை என புகழ்ந்த அனைவருமே சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இராமானுஜம்

சிறையை விட கொடிய சிறப்பு முகாம்: 4 பேருக்கு நடந்தது என்ன?

மழையின் தீவிரம் : வானிலை அப்டேட்!

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *