இரவின் நிழல் : ப்ளூ சட்டை மாறனின் விமர்சனமும் பார்த்திபன் பதிலும்!

சினிமா


இரவின் நிழல் படம் குறித்த ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்துக்கு நடிகர் பார்த்திபன் பதிலளித்துள்ளார்.

கடந்த 15ஆம் தேதி அன்று பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள “இரவின் நிழல்” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தின் உள்ளடக்கம் பற்றி பல்வேறு வகையிலான விமர்சனங்கள், கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ப்ளு சட்டை மாறன் பார்த்திபன் கூறுவது போன்று ‘இரவின் நிழல்’ நான் லீனியர் படமே இல்லை. இதுபோன்று ஏற்கனவே படங்கள் வந்துவிட்டது எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

உதாரணமாக ஈரானிய இயக்குநர் ஷரம் மோக்கிரி இயக்கத்தில் எடுக்கப்பட்ட பர்ஷிய மொழி படம் Fish and Cat படத்தைக் குறிப்பிட்டுள்ளார் .

இதற்குப் பதில் சொல்லும் வகையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில்,

“விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ,
சனங்களோ உலக அளவில் ஒன்றென உருக,
நண்பர் ப்ளூ சட்டை மாறன் அவர்களின்
மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு
படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அதுசரி!
எதுசரி என விளங்க!
மோர் ஓவர்…
கூகுளில் அவர் சொல்லும் படம் ‘நான் லீனியர்’என்ற வரிசையில் இல்லை. இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை !
Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்து கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear shot movie’ என விளம்பரப் படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைபேசியில் சிறப்புக் காட்சியைப் பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதைச் சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம் (அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குநர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதையே!”என நக்கல் நையாண்டியுடன் பதில் கூறியுள்ளார்.

லீனியர், நான் லீனியர் படம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமின்றி பொது தளத்திலும் குழப்பம் இருக்கிறது.


சிங்கிள் ஷாட் என்றால் என்ன?

கேமராவை ஆன் செய்து மொத்த படப்பிடிப்பையும் ஒளிப்பதிவு செய்த பின்னரே கட் செய்யப்படும். அதில் வந்து போகும் கதாபாத்திரங்கள் எந்த பிழையும் செய்யாமல் நடித்தால் மட்டுமே இது சாத்தியம். கதை ஒரே நேர்கோட்டில் பயணிப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில் திரைக்கதை நிகழ்வதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டுக் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் நடித்து சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தை சிங்கிள் ஷாட் லீனியர் படம் என கூறப்படுகிறது.

சிங்கிள் ஷாட்டில் ஏற்கனவே படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஈரானிய இயக்குநர் ஷரம்மோக்கிரி இயக்கத்தில் எடுக்கப்பட்ட பர்ஷிய மொழி படம் FishandCat. அதே போல 2015ம் ஆண்டு வெளியான ஜெர்மன், ஆங்கில சினிமா விக்டோரியா ஆகியவையும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இது போன்று எண்ணற்ற படங்கள் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் கதை சொல்லும் பாணி லீனியராகவே இருக்கும்.

சிங்கிள் ஷாட் நான் லீனியர் என்றால் என்ன?
கதையின் நாயகன் வெவ்வேறு வயதில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், கதை நிகழும் நிலப்பரப்பு வெவ்வேறாகவும் இருந்து ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் நான் லீனியர் படம் என கூறப்படுகிறது. இரவின் நிழல் திரைக்கதை இந்த அடிப்படையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இரவின் நிழல் படத்திற்காக 63 ஏக்கரில் படப்பிடிப்பிற்கான அரங்கம் அமைத்து, அவற்றைக் காட்சிகளுக்கு ஏற்ப கலை வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.
இரவின் நிழல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் முதல் முயற்சியில் சாத்தியமாகவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து 23வது முறை ஒருசேர எடுக்கப்பட்டு பார்த்திபனின் முயற்சி வெற்றிபெற்று படம் திரைக்கு வந்திருக்கிறது. சிங்கிள் ஷாட் படங்கள் என்றாலே குறைவான நடிகர்களுடன், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மையமாக கொண்டு கதை இருக்கும். ஏனெனில் அதில் பிழைகளுக்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், இதிலோ எக்கச்சக்க நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இயக்குநர் ஆர்தர் வில்சனின் திட்டப்படி ஒரு கிம்பிளை 90 நிமிடங்கள் நூல் பிடித்தார்போல் கையாண்டிருக்கிறார் ஏ.கே.ஆகாஷ். 63 ஏக்கர் செட்டுக்குள் நடக்கும் கதையில் கடந்துபோகும் கதாபாத்திரங்கள், உயிரற்ற பொருட்கள், விலங்குகள் இவை எதுவும் கேமரா ஃபோக்கசில் மறைபட்டு போகாமல் ஃபோக்கஸ் புல்லர் மூலம் பதிவு செய்திருக்கிறார்கள் சங்கரன் டிசோசா, ராஜேஷ் குழுவினர்.

ஆதிகால மேடை நாடகம், கிராமங்களில் இன்றளவும் அரிதான புழக்கத்தில் இருக்கும் பாவைக்கூத்துகளில் காட்சிகளுக்கு ஏற்ப மேடையின் பின்புறம் இருக்கும் திரை மாற்றப்படும். ராமன் பட்டாபிஷேக காட்சிக்கு அரண்மனை சபை, வனவாசத்திற்கு மரங்கள் அடர்ந்தவனம் திரை என மாற்றப்படும். இரவின் நிழல் படத்தையும் இதே பாணியை நவீன தொழில்நுட்ப உதவியுடன் எடுத்துள்ளனர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் கருத்துக் கேட்டபோது, ‘கடந்த ஒரு வருடகாலமாக உலகின் முதல் நான் லீனியர் படம் என்பதுதான் பார்த்திபன் இரவின் நிழல் படம் சம்பந்தமான அறிவிப்பு. ப்ளு சட்டை மாறன் கூறியதுபோன்று பொய்யாக இருந்தால் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரவின் நிழல் படத்திற்கு எப்படி இசையமைத்திருப்பார்’ என்கின்றனர்.

அம்பலவாணன்

+1
0
+1
0
+1
0
+1
9
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *