சினிமா சம்பந்தமானவர்கள் பற்றி கிசுகிசு பாணியில் திரைக்கலைஞர்கள் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு செய்தியாக எழுதுவது உண்டு. அதில் குறைந்தபட்ச நேர்மையும், நாகரிகமும் இருந்தது.
அதிகரித்துவிட்ட இணைய தளங்கள், தொலைக்காட்சிகள், யுடியுப்கள் தங்களை முன்னிலை படுத்திக் கொள்ளவும், அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கவும் தகவலின் உண்மை தன்மையை விசாரிப்பது அல்லது உறுதிப்படுத்துவது என்கிற குறைந்தபட்ச பொறுப்புணர்வு இல்லாமலே செய்தியை வெளியிடும் போக்கு அதிகரித்து வருவதை திரைத்துறை பிரபலங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தாலும் செய்தி நிறுவனங்களும், செய்தியாளர்களும் அதனை சட்டை செய்வதில்லை என்கின்றனர் திரையுலகினர்.
கடந்த சில நாட்களாக இந்தியன் – 2 படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததால் இந்தியன் – 3 படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளனர் என்கிற செய்தி சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சினிமா படங்களுக்கு ஓடிடி மூலம் கிடைக்கும் வருவாய் கூடுதல் வருவாயாக பார்க்கப்பட்டது. இன்றைக்கு அந்த வருமானம் தமிழில் தயாராகும் எல்லா படங்களுக்கும் கிடைப்பது இல்லை.
இந்த வருடம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வெளியான 160க்கும் மேற்பட்ட படங்களில் 70% படங்களின் ஓடிடி உரிமை விற்பனை ஆகாமல் முடங்கியுள்ளது. இந்த நிலைமைக்கு காரணம் ஓடிடி தளங்களில் ஒளி பரப்ப நீண்ட தொடர்களையும், திரைப்படங்களையும் அவர்களே தயாரிக்க தொடங்கியுள்ளதுதான்.
இந்த சூழலில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தியன் – 3 படத்தை வட்டி, லாபம் என எல்லாம் சேர்த்து 400 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தால் மட்டுமே தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். இப்படிப்பட்ட வணிக ரீதியான அடிப்படை தகவல்கள் தெரியாமல், சினிமா வரலாறு தெரியாத செய்தியாளர்கள் எழுதும் செய்திகள் பல்வேறு திரைப்படங்களின் வணிகத்தை சிதைக்க காரணமாகி விடுகிறது என்கின்றனர் திரைப்பட தயாரிப்பாளர்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. பெரும் பொருட்செலவில், நீண்ட போராட்டத்துக்கு பின் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெறவில்லை.
இந்தியன் 2 படத்தின் முதலீட்டு அளவில் அந்தப் படத்தின் வசூல், பிற வியாபாரங்கள் மூலம் லைகா நிறுவனத்துக்கு பெரும் நஷ்டமே ஏற்பட்டது. அதற்காக இந்தியன் – 2 படத்தை வாங்கியவர்கள், விநியோகம் செய்தவர்களுக்கு இந்தியன் – 3 பட உரிமையை கொடுக்க வேண்டிய நிர்பந்தம் லைகா நிறுவனத்திற்கு உள்ளது.
இந்த நிலையில் ‘இந்தியன் 3’ படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சி செய்து வருவதாக வெளியான தகவல்கள் உண்மையா என்று விசாரித்த போது ஏற்கனவே அந்தப்படத்தின் ஓடிடி உரிமை வியாபாரம் முடிந்துவிட்டது.
நேரடியாக ஓடிடியில் வெளியிடுவது என்றால் படத்தின் நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இருவரது ஒப்புதலை பெற வேண்டும். முதலீட்டு அளவில் குறைந்தபட்ச லாபத்துடன் கூடிய விலைக்கு வாங்க ஓடிடி நிறுவனம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார் நடித்துள்ள படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அப்படிப்பட்ட முடிவை எடுத்தால் நிறுவனத்தின் எதிர்கால நலன் பாதிக்கப்படும். எனவே இந்தியன் – 3 படத்தை ஓடிடியில் வெளியிடும் நோக்கம் லைகா நிறுவனத்திற்கு இல்லை என்கின்றனர். அந்நிறுவனத்துடன் வணிக தொடர்பில் இருப்பவர்கள் தரப்பில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
டாப் 10 நியூஸ் : அரியானா சட்டமன்ற தேர்தல் முதல் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வரை!
கிச்சன் கீர்த்தனா : நவதானிய சுண்டல்