5 வருட தடைகளை தாண்டி வெளிவரும் இந்தியன் 2 : ரூ.1,000 கோடியை தொடுவாரா கமல்ஹாசன்?

சினிமா சிறப்புக் கட்டுரை

இந்தியன் – 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் ஷங்கர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று அறிவித்தார். அன்று தொடங்கி இன்று (ஜூலை 11) மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழல் வரை இந்தியன் – 2 திரைப்படம் எதிர்கொண்ட பிரச்சினைகள், பத்திரிகையாளர்களுடனான மோதல், சமரசம், படப்பிடிப்பில் விபத்து, உயிர் இழப்பு, தயாரிப்பாளர் – இயக்குநர் இடையே கருத்து வேறுபாடு, அதன் காரணமாக நீதிமன்ற வழக்கு, சமரசம், ரெட் ஜெயண்ட் பட தயாரிப்பில் பங்குதாரராக இணைந்தது என பல்வேறு திருப்பங்கள் ஒரு திரைக்கதை எழுத போதுமான உண்மை சம்பவங்கள் நிறைந்திருக்கிறது.

அதன்படி நாளை வெளியாக உள்ள இந்தியன் – 2 எப்படி பல தடைகளையும், நெருக்கடிகளையும் கடந்து வந்தது என்பது பற்றிய ஒரு மீள்பார்வை இதோ..

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான 2.0 படத்தை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பின் ஷங்கர் இயக்கத்தில் ஜுலை 12 ஆம் தேதி வெளியாகும் படம் இந்தியன்-2. 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் 8.5 கோடி ரூபாய் செலவில் அப்போது தயாரிக்கப்பட்டது. அந்த படம் தியேட்டர் வசூல், தொலைக்காட்சி உரிமை, ஆடியோ உரிமம் மூலம் 30 கோடி ரூபாய் வருமானத்தை பெற காரணமாக இருந்தது. இன்றைய சினிமா வணிகத்தில் கமல்ஹாசன் அல்லது முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்கு இரண்டு விநியோக பகுதி உரிமை மூலம் இந்த தொகை கிடைக்கிறது. 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தின் மொத்த வருவாய் 27 கோடி ரூபாய் அந்த சாதனையை இந்தியன் 30 கோடி ரூபாய் மொத்த வருவாய் ஈட்டி முறியடித்தது என இப்போதும் கூறப்பட்டு வருகிறது. இந்தியன்-2 அதே போன்ற சாதனையை நிகழ்த்துமா என்கிற கேள்வி எழுப்பபட்டு வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. அதே 600 கோடி ரூபாய் செலவில் இந்தியன்-2, 3 என இரண்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 2.0 மொத்த வருவாய் சாதனையை இந்தியன்-2 முறியடிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் நாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் செயல்பட்டு வருகின்றனர் என்கிறது தமிழ் சினிமா வட்டாரம்.

இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் அதிகமான நட்சத்திர நடிகர்கள் இருப்பது தமிழ் சினிமாவில் தான். ஆனால் இவர்களை காட்டிலும் குறைவாக சம்பளம் வாங்கும் தெலுங்கு, கன்னட நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்களின் வசூல் சாதனைகளை இன்றளவும், முறியடிக்கவோ, குறைந்தபட்சம் சமன் செய்யவோ முடியாதவையாகவே இருக்கின்றன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரது படங்களும் 500 கோடி ரூபாய் மொத்த வசூல் கடந்து விட்ட போதும் கன்னட கேஜி எஃப், தெலுங்கு பாகுபலி, RRR படங்கள் எட்டிப்பிடித்த 1000 ம் கோடி வசூலை நாமும் சாதிக்க வேண்டாமா என்கிற ஆதங்கம் தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

சாதித்த கன்னட, தெலுங்குபட நடிகர்கள் அந்த படங்களின் வெற்றிக்கு தேவையான அனைத்து புரமோஷன் நிகழ்வுகளிலும் நேரம், காலம், பணத்தை எதிர்பார்க்காமல் கடுமையாக தங்களின் பங்களிப்பை கொடுத்தார்கள். அதற்கான பலனும் கிடைத்தது. ஆனால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திர நடிகர்கள் தாங்கள் நடித்த படங்களின் புரமோஷனுக்கு வருவதில் அரண்மனையில் இருக்கும் அந்தப்புர அழகிகளாகவே இருக்கின்றனர்.  ஆம் மன்னர் மனம் மகிழ இருந்தால் போதும் என்பது போல நடித்தால் மட்டும் போதும் என்கிற மன நிலையில் இருந்து வருகின்றனர்.

இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாநாயகனாக, இயக்குநராக, தயாரிப்பாளராக கமல்ஹாசன் செயல்பாடு இருந்து வருகிறது. தான் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் இன்றி, உலகம் முழுக்க படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். ஊடகங்களை தவிர்க்காமல், எந்த கேள்வியாக இருந்தாலும் எதிர்கொண்டு பதில் கூறுகிறார். விக்ரம் படத்தின் சாதனையை தனது படம் முறியடிக்க வேண்டும், 2.0 சாதனையை சமன் செய்ய வேண்டும், அகில இந்திய சாதனையை நிகழ்த்த வேண்டும் என்கிற முனைப்புடன் கமல்ஹாசன் செயல்பட்டு வருகிறார் என்கிறது இந்தியன் – 2 பட வட்டாரம்.

“அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!” என்ற வாசகத்துடன் 2019-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கோடம்பாக்கத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் ஷங்கர்.

23 ஆண்டுகள் கழித்து, இந்தியன் முதல் பாகம் வெளியான பிறகு வந்த இரண்டாம் பாக அறிவிப்பு கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது மிகப் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அதற்கு காரணம், 1996-லிருந்து 2019-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம் என வித்தியாசமான முயற்சிகளால் சினிமா ரசிகர்களின் ரசனைகளை வேறு தளத்துக்கு கொண்டு சேர்த்திருந்தார்.

ஜனநாயகத்தை கமல் காப்பார் - பினராயி விஜயன் வாழ்த்து! | nakkheeran

2018-ம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம்தேதி, மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது கட்சியின் பெயரையும், கொடியையும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தி அரசியல் கட்சி தலைவரானார்.

இயக்குநர் ஷங்கர், இந்தியன் முதல் பாகத்துக்கு பின்பு கடந்து போன 23 ஆண்டுகளில் ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 என தனது பிரமாண்ட திரைப்படங்களின் மூலம் ஒட்டுமொத்த திரை உலகையும் ஈர்த்திருந்தார்.

இந்தியன்’ படத்தின் முதல் பாகமே அரசு எந்திரத்தில் புரையோடிக்கிடக்கும் ஊழல் பற்றி பேசியிருந்தது. இரண்டாம் பாக அறிவிப்பு வெளியான காலத்தில் கமல்ஹாசன் முழுநேர அரசியல்வாதியாகி விட்டதால், இதுதான் கமல்ஹாசனின் கடைசித் திரைப்படம் என்று கூறப்பட்டது.

அதனால் இந்தியன் – 2படத்தில் அரசியல் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தது. 2019-ம் ஆண்டு டிசம்பரில் உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடக்கப்பட்ட போது சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்தியன் – 2 முடங்கியது.

2020-ம் ஆண்டில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடந்து வந்தது. அந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் பூந்தமல்லி அருகே தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் திடீரென முறிந்துவிழுந்தது. இதில் கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய 3 பேர் பலியாகினர். இதனால் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது.

விபத்து சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டவழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்து, விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த மனுவில் ‘படப்பிடிப்பில் ஏற்பட்டவிபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினேன்.

அரசியல் உள்நோக்கத்துடன் போலீஸார் எனக்கு சம்மன் அனுப்பி துன்புறுத்துகின்றனர். ஏற்கெனவே இந்த விபத்து சம்பவத்தினால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். அந்த வேதனையில் இருந்து நான் இன்னும் விடுபடவில்லை. எனவே, விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் என்னை துன்புறுத்தக் கூடாது என்று போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளித்த உயர் நீதிமன்றம், அவரை விசாரணைக்காக விபத்து நடந்த இடத்துக்கு போலீஸார் அழைக்கக் கூடாது. அதேநேரம், புலன் விசாரணை தொடர்பாக விசாரணை அதிகாரி முன்பு கமல்ஹாசன் ஆஜராக உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.

படபிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்தியன்-2 படத்தில் நடித்து வந்த நடிகர் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உடல் நல குறைவால் 2021 ஆம் ஆண்டுஅக்டோபர் மாதத்தில் காலமானார்கள்.

இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!! 2019 டூ 2024..? – Madhimugam

படம் தொடங்கியதில் இருந்தே பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிபோய் காலதாமதமாகிக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

2021-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ம் தேதி, RC15 , ராம்சரண் நடிக்கும் 15-வது திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்ட பேச்சை உறுதி செய்தது.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குநர் ஷங்கர் இந்தியன் – 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்தியன் – 2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்து தர ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும். இயக்குனர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசிய நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமான மனுவில் கூறப்பட்டிருந்தது.

இயக்குநர் ஷங்கர் தாக்கல் செய்த பதில் மனுவில், “முதலில் இந்தப் படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார். பின்னர் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்தது. கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்தோம். படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என்று பட்ஜெட் போட்ட நிலையில், அதை குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை தொடங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தினர். அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீடில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது. நடிகர் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானது. அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதவிர படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது. பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல” என்று கூறியிருந்தார்.

நீதிமன்றத்தில் இந்தியன் – 2 வழக்கு நடைபெற்று வந்த சூழலில் 2021ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலில் கமல்ஹாசன் கட்சியான மநீ மய்யம் 180 இடங்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் 33.26% வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

கொரோனா பொது முடக்கம், தேர்தல் தோல்விகளை கடந்து நான்கு ஆண்டு கால இடைவெளிக்குப் பின் ‘ஆரம்பிக்கலாமா’ என்ற வசனத்துடன் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து தயாரித்தார் கமல்ஹாசன். படம் வெற்றி பெற்று கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் 500 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக விக்ரம் இடம்பெற்றது.

விக்ரம் படத்தின் வெற்றி ‘இந்தியன் 2’ படத்தை முடிப்பதற்கு உந்துசக்தியாக மாறியது.பெரும் உதவியாக அமைந்தது. படத்தின் தயாரிப்பில் விக்ரம் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்தது.

லைகா – ஷங்கர் மற்றும் கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் ஒத்துழைப்புடன் இயற்கை தடைகள், உயிரிழப்புகள், நீதிமன்ற வழக்கு என அனைத்தையும் கடந்து ஜூலை 12 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தியன் – 2 வெளியாக உள்ளது.

150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்தியன் – 2 சுமார் 700 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டதற்கு இலவச இணைப்பாக இந்தியன் – 3ம் தயாரிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் வெற்றி தந்த நம்பிக்கை, பொன்னியின் செல்வன் திரைப்படம் தந்த விஸ்வரூப வெற்றி தந்த உற்சாகத்தில் இந்தியன் – 2 படத்தை லைகா – ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.

இந்திய திரையுலகில் தொழில்நுட்பம், புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்துவதில் முதன்மையானவராக இன்று வரை செயல்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் 500 கோடி வசூல் மூலம் 1000ம் கோடி ரூபாய் என்பதில் அரை கிணறு தாண்டியிருக்கிறார்.

ஷங்கர், லைகா, ரெட் ஜெயண்ட் கூட்டணியில் 1000ம் கோடிரூபாய் வசூல் என்கிற முழுகிணறை கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகும் இந்தியன் – 2 கடந்து தமிழ் சினிமாவில் 1000 ம் கோடி ரூபாய் வசூலை கடந்த முதல் படமாக சாதனை நிகழ்த்த வேண்டும் என்கிற தமிழ் சினிமா பார்வையாளர்கள், நலம் விரும்பிகளின் ஏக்கம் போக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– இராமானுஜம்

தருமபுரி நாடாளுமன்ற தேர்தல் வெற்றி… அரூருக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!

தேசிய கோபால் ரத்னா விருது-2024

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “5 வருட தடைகளை தாண்டி வெளிவரும் இந்தியன் 2 : ரூ.1,000 கோடியை தொடுவாரா கமல்ஹாசன்?

  1. Hi my loved one I wish to say that this post is amazing nice written and include approximately all vital infos Id like to peer more posts like this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *