1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு பின் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.
2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படம் பல தடைகளுக்கு பின் 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் அறிமுக வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இன்றைய காலகட்டத்தில் மீண்டும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அதிகரிக்க தொடங்கிவிட்டதால் இந்தியன் மீண்டும் வர வேண்டும் என்று மக்கள் சமூக வலைத்தளங்களில் #COMEBACKINDIAN என பதிவிடுகிறார்கள்.
மக்களின் கோரிக்கையை ஏற்று லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு பாடம் புகட்ட மீண்டும் இந்தியன் வருகிறார். அதன் பிறகு சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதே இந்தியன் 2 கதை சுருக்கம்.
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜூன் மாதம் இந்தியன் 2 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வரும் மே 16 ஆம் தேதி இந்தியன் 2 பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த விழாவில் பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் ஷங்கர் – ரன்வீர் சிங் கூட்டணியில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக் உருவாக இருப்பதால் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் ரன்வீர் சிங் கலந்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஷங்கர் அவர்களின் மூத்த மகள் திருமண வரவேற்பு விழா நடைபெற்ற போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விழாவில் கலந்துக் கொண்டு குத்தாட்டம் போட்ட வீடியோ செம வைரல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
வரும் மே முதல் வாரத்தில் இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஐபிஎல் 2024: குஜராத்தை அசால்டாக தட்டி தூக்கிய RCB
பிஎப்ஐ அமைப்புக்கு காங்கிரஸ் ஆதரவு : மோடி குற்றச்சாட்டு!