சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறை இரண்டாவது நாளாகச் சோதனை மேற்கொண்டு வருகிறது. கணக்கில் வராத பணத்தைப் பயன்படுத்தி சினிமா எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல சினிமா பைனான்சியரும், கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பாளருமான அன்புச்செழியனுக்குச் சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமியின் நுங்கம்பாக்கம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன், டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறை விடிய விடிய சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் முடிவில், தயாரிப்பாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடும்.
செல்வம்