தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் தில் ராஜூ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜனவரி 21) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ. இவரது ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் விஜய் நடித்த வாரிசு, ராம் சரண் நடித்த தி கேம் சேஞ்சர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளது. இவர் சமீபத்தில் தெலங்கானா திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மகர சங்கராந்தி வெளியீடாக தில் ராஜூ தயாரிப்பில் தி கேம் சேஞ்சர், சங்கராந்திகி வாஸ்துன்னம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இதில் தி கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், சங்கராந்திகி வாஸ்துன்னம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது.
இந்தநிலையில், ஹைதராபாத்தில் உள்ள தில் ராஜூ வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தில் ராஜூவின் மகள் ஹன்சிதா ரெட்டி, சகோதரர் சிரிஷ் ஆகியோர் வீடுகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.