இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை இன்று (ஆகஸ்டு 30) தெரிவித்துள்ளது.
பாரதிராஜாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர், குடும்பத்தினர் ஆலோசனை படி அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ”நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பனியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். எனவே என்னை நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி விரைவில் சந்திப்போம்” என்று (ஆகஸ்ட் 27) ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இயக்குநர் பாரதிராஜா.
தற்போது, அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிவருகிறது. இந்நிலையில் எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,”தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ” என்று கூறப்பட்டுள்ளது.
இன்று (ஆகஸ்ட் 30 ) மதியம் நடிகை ராதிகா எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு நேரில் சென்று இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
என் இனிய தமிழ்மக்களே… நான் நலமாக உள்ளேன்: பாரதிராஜா