இளையராஜா மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஜனவரி 25) காலமானார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி(47). 1984ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்கிற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர்.
2000 ஆம் ஆண்டு வெளியான பாரதி படத்தில் இடம் பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலை பாடினார் பவதாரிணி. இதற்காக சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதை பெற்றார்.
‘ராசய்யா’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’ ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.
2002ல் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தந்தை இசையமைத்த பாடல்கள் மட்டுமல்லாது, சகோதரர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இசையமைத்த பாடல்களையும் பாடியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த 5 மாதங்களாக புற்றுநோய் பாதிப்புக்கு இலங்கையில் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி உயிரிழந்துள்ளார். அவரது உடல் நாளை சென்னைக்கு எடுத்து வரப்பட இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஐசிசி விருது: டிவில்லியர்ஸ் வாழ்நாள் சாதனையை முறியடித்த கோலி
தூத்துக்குடி மறுசீரமைப்புக்காக புதிய திட்டம் : துவக்கி வைத்த கனிமொழி