மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மலையாளத்தில் பெரும் வசூலை ஈட்டியது.
மலையாளம் மட்டுமல்ல, தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் சக்கை போடு போட்ட படம் மஞ்சும்மல் பாய்ஸ் .
தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் OTT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் நண்பர்கள் சிலர் குணா குகையை பார்க்க செல்கின்றனர்.
அங்கு சுபாஷ் என்கிற நண்பன் தவறி அந்த குகைக்குள் விழுந்துவிட, நண்பர்கள் அவரை எப்படி மீட்கின்றனர், அதன் பிறகு சுபாஷின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்துக்கு உயிர் கொடுத்தது, 1991ஆம் ஆண்டு வெளியான குணா படத்தின் பாடல் “கண்மணி அன்போடு காதலன்” பாடல் தான்.
குகையில் இருந்து சுபாஷை அவரது நண்பன் தூக்கிக்கொண்டு வெளியே வரும்போது, “உண்டான காயமெங்கும்” என பாடல் இடம்பெற்றது, தியேட்டரில் ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளியது.
படம் வெளியாகி 3 மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு நேற்று (மே 22) நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரரான ஷான் ஆண்டனி மற்றும் பாபு ஷாகிர், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சவுபின் ஷாகிர் ஆகியோருக்கு தனது வழக்கறிஞர் மூலம் இளையராஜா அனுப்பிய நோட்டீஸில்,
“தன்னுடைய இசையமைப்பில் உருவான பாடலை பயன்படுத்த முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
முறையான அனுமதி பெறாமல், மஞ்சும்மல் பாய்ஸின் தயாரிப்பாளர்கள் வணிக ரீதியாக தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், முறையற்ற வழிகளில் பார்வையாளர்களையும் ஈர்க்கவும் பாடலை பயன்படுத்தியுள்ளனர்.
இதற்காக 15 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும். பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் டீசரில் தனது இசையமைப்பில் வந்த பாடலுக்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
தனது பாடலுக்கு காப்புரிமை கேட்டு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார். தற்போது, மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கண்மணி அன்போடு காதலன் பாடல் இல்லாமல் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை நினைத்துகூட பார்க்க முடியாது என சமூக வலைதள வாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சினிமா பாணியில் மருத்துவமனைக்குள் நுழைந்த போலீஸ் ஜீப் … வைரல் வீடியோ!
share market: முடிவை அறிவிக்கும் 181 நிறுவனங்கள்… முக்கிய பங்குகள் என்னென்ன?
IPL 2024: RCB vs RR: ராஜஸ்தான் அபார வெற்றி, தொடரிலிருந்து வெளியேறிய RCB