‘மக்கள் நாயகன்’ என சினிமா ஆர்வலர்கள், ரசிகர்களால் 1980 முதல் 1990 வரை கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன்,
மண்சார்ந்த படங்களில் கிராமத்து நாயகனாக நடித்தவர், எந்தவிதமான மிகைநடிப்பும் இன்றி தனது யதார்த்தமான நடிப்பால் கிராமத்து மக்களின் மன சிம்மாசனத்தில் இடம் பிடித்தவர்.
இந்த 45 வருடங்களில் அவர் நடித்த படங்கள் அனைத்திலுமே கதாநாயகனாக மட்டுமே நடித்த சாதனையை நிகழ்த்திய ராமராஜன், தற்போது ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
‘எட்செட்ரா என்டர்டெய்ன்மெண்ட்’ சார்பில் வி.மதியழகன் இந்த படத்தைத் தயாரித்து வருகிறார்.
ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் இந்தப் படத்தில் இணை நாயகர்களாக நடிக்கின்றனர்.
‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரான ஆர். ராகேஷ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
‘சாமானியன்’படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைக்க ‘இசை ஞானி’ இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ராமராஜனையும், இளையராஜாவையும் பிரித்துப் பார்க்க முடியாது. ராமராஜன் நடித்துள்ள பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்து, அவரது வெற்றிக்கு துணை நின்று காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்துள்ளார் ராஜா.
இன்னும் சொல்லப் போனால் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக வெற்றிபெற்ற ராமராஜன் நடித்துள்ள படங்களின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. பல வருடங்கள் கழித்து மீண்டும் கதாநாயகனாக நடிக்க திரும்பியுள்ள ராமராஜனின் படத்திற்கு இளையராஜா இசையமைப்பதை விட பொருத்தமான அம்சம் வேறு இருக்க முடியாது.
இந்தப் படம் தொடர்பாக இளைய ராஜாவை அவரது இசைக்கூடத்தில் நேரில் சந்தித்து பேசினார் ராமராஜன்.
அப்போது ராஜாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நெகிழ்ந்தபடி மனம்விட்டு பேசிய ராமராஜன்,
“நான் பல வருடங்கள் கழித்து நடிப்பிற்குத் திரும்பி உள்ளேன். இந்தப் படத்திற்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும்” என உரிமையுடன் கேட்க, இளையராஜாவும் அதற்கு மனப்பூர்வ சம்மதம் தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநரான ஆர். ராகேஷ் இந்த சந்திப்பு பற்றி கூறும்போது, ‘சாமானியன்’ என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன்தான்.
காரணம், சாமானிய மக்கள் இன்றும் தங்களில் ஒருவராகத்தான் அவரைப் பார்க்கிறார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக அவர் மறுபிரவேசம் செய்வதற்கு ஏற்ற கதையாக இந்த படம் அமைந்துள்ளது.
தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால் ராமராஜனின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி.
ராமராஜனின் பல வெற்றிப் படங்களை இயக்கி, அவரது திரையுலக பயணத்திற்கு உறுதுணையாக நின்றவர் இயக்குநர் கங்கை அமரன். அவர் மூலமாக இளையராஜாவை அணுகி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்கியது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.
மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார். கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்த படத்தின் வெற்றியின் அம்சங்களில் ஒன்றாக இசைஞானியின் இசையும் இருக்கும்.
தற்போது படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.” என்றார்.
இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘அண்ணன்’ என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார்.
அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.
3 அல்ல, 300 சிலைகள் கூட வைப்போம்: ஸ்டாலின்
ஃபிஃபா உலகக் கோப்பை: வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் ஜியோ!