"Ilaiyaraja is not superior to all" : Chennai High Court

”இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை” : உயர்நீதிமன்றம்

சினிமா

காப்புரிமை விவகார வழக்கு விசாரணையின் போது, ‘இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை’ என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 17) தெரிவித்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4,500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் ஒப்பந்தம் கடந்த 2014ஆம் ஆண்டுடன் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாகக் கூறி இரு நிறுவனங்கள் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும், இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், ’இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைக்கிறார்’ என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் , ‘ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான்’, வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி மகாதேவன், “இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அப்படி கூற முடியாது” என கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், ”காப்புரிமை விவகாரத்தில் அவரது உரிமை தான் மேலானது என்ற வகையில் தான் மூத்த வழக்கறிஞர் அந்த கருத்தை தெரிவித்தார். இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்.

ஆனால் ஊடகங்கள் அதை வேறுமாதிரி திரித்து செய்தி வெளியிட்டன. இளையராஜா ஒருபோதும் தன்னை அப்படிப் பிரகடனப்படுத்தியதில்லை” என தெரிவித்தார். மேலும் மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வர முடியாததால் வழக்கை ஒத்தி வைக்கும்படி சரவணன் கோரினார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’வாட்ஸ் அப்பில் கூட பிரச்சாரம் கூடாது’ : தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் என்ன?

2024 டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார்?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *