சூரியின் செயலால் டென்சனான இளையராஜா

சினிமா

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் திட்டமிட்ட நாட்களையும், பட்ஜெட்டையும் கடந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக 50 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ள விடுதலை படம் வரும் மார்ச் 31 அன்று வெளியாகிறது. இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.

வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் முதல் கட்டமாக விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வு நேற்று (மார்ச் 8) மாலை
சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இது போன்ற தனியார் அரங்குகளில் சினிமா நிகழ்ச்சிகள், விழாக்கள் நடைபெறும்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% அனுமதி சீட்டுக்களை படத்தில் நடித்துள்ள கதாநாயகர்கள் வாங்கிகொள்வார்கள்.

விழாவிற்கான அனுமதி பாஸ் வாங்கிய கதாநாயகர்கள் தங்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆட்களை திரட்டி அரங்கத்தை நிரப்ப கூறுவார்கள். இதற்கு சில நடிகர்கள் பணம் கொடுப்பார்கள். சில நடிகர்கள் பாஸ் கொடுப்பதே பெரிய விஷயம் என பணம் கொடுப்பதை தவிர்த்துவிடுவார்கள்.

மானசீக நடிகரை பக்கத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கித் தவிக்கும் ரசிகர்கள் பட்டியலை தயாரிக்கும் மன்ற நிர்வாகி சிரமப்பட்டு விழாவிற்கு பாஸ் வாங்கியுள்ளதாக கூறி அவர்களிடம் ஒரு கட்டணத்தை வசூல் செய்வதும் உண்டு. அவ்வாறு இல்லாமல் சொந்த செலவில் வந்தால் போதும் என கூறுபவர்களும் உண்டு. விழா அரங்கிற்குள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வகுப்பு எடுத்து விடுவார்கள்.

சூரிக்கு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்மன்ற கட்டமைப்பு இல்லை என்பதால் விடுதலை டிரைலர் நிகழ்ச்சிக்கு தனது சொந்த ஊரில் இருந்து ஆட்களை சொந்த செலவில் பஸ்ஸில் அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ரசிகர் மன்ற பேனர்களுடன் விழா அரங்கில் அமர்ந்து கொண்டு ‘சூரி’ என்ற பெயரை உச்சரித்தாலே கை தட்டுவது, சூரி வாழ்க என கோஷமிட்டு கொண்டிருந்தனர்.

கட்டமைக்கப்பட்ட ரசிகர் மன்றங்களாக இருந்தால் அவர்களுக்கு நிர்வாகிகள் எப்போது கை தட்டவேண்டும், கோஷம் போட வேண்டும் என்று முன்னரே வகுப்பு எடுத்துவிடுவார்கள். சூரிக்கு அப்படி ஒரு கட்டமைப்பு, நிர்வாகிகள் இல்லை.

இளையராஜா விழா அரங்கிற்கு வந்த பிறகு நேரடியாக மேடை ஏறி இசையை வெளியிட்டார்.

அவர் பேசும் போதும் சூரி அழைத்து வந்தவர்கள் கோசமிடுவதும், கைதட்டுவதுமாக இருந்தனர்.

இதனால் டென்சனான இளையராஜா இப்படியே கத்திக் கொண்டிருந்தால் மைக்கைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவேன் என்றார்.

அதன்பிறகே அவர்கள் கோஷமிடுவதை நிறுத்தினார்கள். அதன் பிறகு மேடையில் படக்குழுவினர் அமர்ந்து படத்தைப் பற்றிப் பேசினார்கள். யார் மேடையில் பேசினாலும் ‘சூரி’ என்று சொன்னால் கோஷம் போட சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களது சத்தம் ஒரு கட்டத்தில் வரம்பு மீறி ஒலிக்க சூரியே எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிட்டு நிறுத்தச் சொன்னார்.

கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் பாக்கியம். அதை இப்படியெல்லாம் செய்து கெடுத்துக் கொள்ளப்போகிறாரா அல்லது தவிர்க்கப்போகிறாரா என்பதே தமிழ் சினிமா வட்டாரத்தில் விவாதிக்கப்படும் சம்பவமாக இருக்கிறது விடுதலை ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு.

இராமானுஜம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: செந்தில் பாலாஜி விளக்கம்!

நாடாளுமன்றத்தில் காதல் காட்சி!

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *