மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்திருந்த வழக்கில்,கடந்த 1997 ஆண்டு இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் தங்கள் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த ஒப்பந்தத்தின் படி தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தங்களுடைய அனுமதி இல்லாமல் அந்த படங்களின் பாடல்களை தற்போது யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக இளையராஜாவின் இசை நிறுவனம் மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர் . கடந்த முறை இந்த வழக்கின் விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நடைபெற்ற போது, ஒப்பந்தம் மேற்கொண்டபோது, யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடவில்லை என்றும், ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் , இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக இன்று (பிப்.13) இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரணையின் போது, இளையராஜாவிடம் நீதிபதி உங்களிடத்தில் எத்தனை பங்களாக்கள் உள்ளன? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த இளையராஜா, இசையில் மட்டுமே முழு ஈடுபாட்டுடன் உள்ளதால் தன்னிடத்தில் உள்ள பொருட்கள் குறித்து எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார்.