இசைக்குயில்களுக்கு ஒரு குட்நியூஸ் : பவதாரணி பெயரில் இளையராஜா செய்யப் போகும் காரியம்!

Published On:

| By Kumaresan M

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆயுர்வேத சிகிச்சை பெற இலங்கை சென்ற இடத்தில் கடந்த ஆண்டு உயிரிழந்தார். பவதாரிணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மகள் மறைவுக்கு பிறகு, இசை இசை என்று ஒடிக் கொண்டு இருந்து விட்டேன். என்னால் என் மகளின் அருகில் இருக்க முடியாமல் போய் விட்டது என்று இளையராஜா வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

பிப்ரவரி 12 ஆம் தேதி பவதாரிணியின் பிறந்த நாள் ஆகும். இதை முன்னிட்டு இளையராஜா கூறுகையில், இரு நாட்களுக்கு முன் மலேசியா சென்றிருந்தேன். அங்கு, எனக்கு முன்னர் ஏராளமான சிறுமிகள் பாடினர். சிலர் இசையமைத்தனர். இதை பார்த்ததும் எனது மகளின் கடைசி ஆசைதான் எனது நினைவுக்கு வந்தது.

பவதாரிணிக்கு சிறுமிகள் அடங்கிய இசைக்குழு தொடங்க வேண்டுமென்பதுதான் கடைசி ஆசையாக இருந்தது. இதனால், எனது மகளின் பெயரில் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய இசைக்குழுவை தொடங்கவுள்ளேன். நானே தகுதியானவர்களை தேர்வு செய்வேன். மலேசியாவில் ஏற்கனவே இரு இசைக்குழுவை தொடங்கியுள்ளேன். உலகம் முழுக்கவிருந்து சிறுமிகள் இந்த இசைக்குழுவில் இடம் பெறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

பவதாரணி பாடகி மட்டுமல்ல. 3 படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். ‘புயலில் ஒரு தோணி’என்ற படத்துக்கு பவதாரிணி கடைசியாக இசையமைத்திருந்தார். பிப்ரவரி 12-ம் தேதி பவதாரிணியின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஒரு சேர சென்னையில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த விழாவில் பவதாரிணி இசையமைப்பில் உருவான ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசையினை இளையராஜா வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, ‘எனது மகளின் பிறந்த நாளும் இறந்த திதியும் ஒரே நாளில் வருகிறது. அபூர்வமாகவே இது போன்று அமையும். என் மகளின் ஆன்மா சாந்தியடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது’ என்று உருக்கத்துடன் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share