"I will not be where there is no self-respect" : Manimegalai

”சுயமரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்கமாட்டேன்” : மணிமேகலை அதிருப்தி!

போட்டியாளாராக வந்த பெண் தொகுப்பாளரின் ஆதிக்கம் காரணமாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தொகுப்பாளர் மணிமேகலை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் வீட்டிற்குள் முடங்கிய பலருக்கும் கவலையை மறக்க வைக்கும் நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பானது குக் வித் கோமாளி. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இதுவரை 4 சீசன்களை கடந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி 5-வது சீசன் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில்  தான்,  ‘குக் வித் கோமாளி’ 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் மணிமேகலை தற்போது அதில் இருந்து வெளியேறுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இனி குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப்போவதில்லை. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சி ஆரம்பாகி நடைபெற்று வருகிறது. நேர்மையுடனும், கடின உழைப்புடனும் எனது 100% உழைப்பைப் போட்டு இந்நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன்.

சுயமரியாதையை விட இங்கு எதுவும் பெரிதில்லை. பிரபலம், பணம், வாய்ப்புகள், தொழில் இவையெல்லாம் எனக்கு இரண்டாவது விஷயம்தான். சுயமரியாதைதான் எனக்கு முதன்மையானது. அது எனக்குக் கொடுக்கப்படாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். அதன் காரணமாகவே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிருந்து வெளியேறுகிறேன்.

இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் என் வேலையில் ஆதிக்கம் செலுத்தினார். அவர் குக் என்பதையே மறந்து, தொகுப்பாளரின் வேலைகளை செய்ய விடாமல், நிறைய குறுக்கீடுகளைச் செய்கிறார். இதுதொடர்பாக எனது உரிமையைக் கேட்பதும், எனக்காக நான் குரல் கொடுப்பதும் இந்நிகழ்ச்சியில் தவறாக மாற்றப்பட்டது.

Harivijay on X: "Manimegalai quits #CookuwithComali due to #Priyanka dominance ! Hats off to @iamManimegalai to bring this out to public . # Manimegalai https://t.co/P7QBSYemof" / X

எனக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன். யாருக்காகவும் அதை நான் நிறுத்தமாட்டேன். இப்போது நடப்பது முன்பு இருந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியாக இல்லை. முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

2010-ம் ஆண்டு முதல் நான் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது 15 ஆண்டுகால இந்தப் பயணத்தில் இப்படியொரு முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்ததே இல்லை. இருப்பினும், எனக்கு இதைச் செய்த நபருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவருக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும்.

வாழு, வாழ விடு.என்னை ஆதரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்” என்று பதிவிட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

மணிமேகலை தனது பதிவில் யாருடைய பெயரையும் நேரிடையாக குறிப்பிடவில்லை என்றாலும், நிகழ்ச்சியில் குக் ஆக பங்கேற்றுள்ள பிரபல தொகுப்பாளர் பிரியங்காவை தான் அவர் கூறியுள்ளார். அவர் ஆதிக்கம் காரணமாகவே விலகியுள்ளார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களின் நிலை என்ன? : கடலூர் ஆட்சியர் விளக்கம்!

ஓய்வு காலத்திலும் நிம்மதி இல்லை: குமுறும் வனத்துறை ஊழியர்கள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts