வரும் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு விஜய் தன்னை அழைக்காவிட்டாலும், தான் செல்லப் போவதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி கொடி, பாடல் அனைத்தும் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. எனவே, தற்போது விஜய்யின் மாநாடு குறித்து மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே, மாநாட்டுக்கு கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் யாரும் வர வேண்டாமென்று நடிகர் விஜய் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக மாநாடு நடைபெறுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, நடிகர் விஷால். சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். த.வெ.க கட்சியில் சேரப்போவீர்களா? என்ற கேள்விக்கு “அப்படியெல்லாம் உடனே முடிவெடுத்து விட முடியாது. அதற்கெல்லாம் இப்போது பதில் சொல்ல அவசியமில்லை.
விஜய் மாநாட்டில் பங்கேற்க கூப்பிட்டால் கலந்து கொள்வேன். வாக்காளர் என்ற முறையில் அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வேன். எனினும், விஜய் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் நான் செல்வேன். அவருடைய கருத்து என்ன, அவர் மக்களுக்கு என்ன கூற போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே நான் அங்கு போவேன்” என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஷாலும் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்ட மன்ற இடை தேர்தலில் போட்டியிடவும் அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு அப்போது நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அதிமுகவில் கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!
நெல்லை: நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்… விடுதி மூடல்!