நடிகர் சிவக்குமார் குடும்ப உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட அமைப்பு அகரம் அறக்கட்டளை வருடம்தோறும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்க பல்வேறு வகைகளில் வழிகாட்டல், உதவிகளை செய்து வருகிறது.
இந்த வருடம் அகரம் அறக்கட்டளை சார்பில் மேல்நிலை கல்வி இறுதி(+2) வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு நேற்று (ஜூலை 24) மாலை சென்னை சாலிக் கிராமத்தில் உள்ள பிரசாத் பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, “தவிர்க்க முடியாத காரணத்தினால் வார நாளில் இந்த நிகழ்வை நடத்த வேண்டியதாயிற்று. 45 வருடங்களாக விருதுகள் கொடுத்து வருகிறோம். 2006-ல் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்கிறார்கள் என்றனர். அதுதான் அகரம் தொடங்க காரணமாக இருந்தது. 20 வருடங்கள் தாண்டிவிட்டோம்.
இன்றும் ஒரு மாதத்துக்கு 3000ம் ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத குடும்பங்கள் உண்டு. அந்தக் குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களின் போர் குணத்துக்கு தலை வணங்குகிறேன். இங்கு வந்திருக்கும் மாணவர்களை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
ஒருவருக்கு வழி காட்டுவது மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த விதை திட்டம் குறித்து உங்களுக்குத் தெரியும். அரசுப் பள்ளியில் படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர் தகுதியானவர் என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். அப்படி 10 ஆயிரம் கடிதங்கள் வரும். அதிலிருந்து நாங்கள் 1,500 எடுத்து அதில் 700, 500 ஆக மாறும்.
இந்த மாணவர்களுக்கு கல்வி கிடைத்துவிட வேண்டும் என நிறைய பேர் உதவி செய்திருக்கிறார்கள். கல்வி எல்லாவற்றையும் மாற்றிவிடும் என நம்பும் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 350 கல்லூரிகள் எங்களுக்கு உதவி செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக 40 கல்லூரிகள் உதவி வருகின்றன. மாணவர்கள் மாணவிகள், கல்லூரிகளில் பெயர் பெற்றுள்ளனர். அதனால் தான் அடுத்தடுத்து எங்களால் கல்லூரிகளை நாட முடிகிறது.
அகரம் முன்னாள் மாணவர்கள் தான் அடுத்தடுத்து இந்த திட்டத்தை முன்னோக்கி நகர்த்தி செல்கிறார்கள். அவர்களுடன் தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர். அகரம்தான் நான், நான் தான் அகரம் என உணர்வுகளுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
‘வாழ்க்கையில் நாம் நினைக்கும் எல்லா விஷயங்களும் சரியாக செல்லாது. அந்த நேரத்தில் பாசிட்டிவாக இருக்க வேண்டும். நல்லதையும், ஆக்கபூர்வமானதை மட்டும் பேசுவோம்’ என்பதை நினைக்கும் அகரம் குழுமத்தில் நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என நினைக்கும்போது பெருமைபடுகிறேன்.
ஒன்றும் இல்லாத நானே இந்த இடத்துக்கு வர முடிந்தது என்றால், 17 வயதில் இத்தனை சிரமத்தையும் தாண்டி நீங்கள் செய்திருக்கும் சாதனை அளப்பரியது. நீங்கள் தொடக்கூடிய எல்லையை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது இருக்கும் பிரச்சினையை பெரிய பிரச்சினையாக நினைக்காதீர்கள். வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு வாழுங்கள். அகரம் உங்களுடைய பொறுப்பு. எல்லோரும் ஊர்கூடி தேர் இழுப்போம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா