பாலேரி மாணிக்கம் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது டைரக்டர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிரபல மேற்குவங்க நடிகையான ஸ்ரீலேகா மித்ரா கொச்சி போலீசில் ஆன்லைன் வழியாக புகார் செய்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் டைரக்டர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சர்ச்சை வெடித்ததையடுத்து, ரஞ்சித் கேரள சினிமா அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபரும் ரஞ்சித் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை சுமத்தினார். கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமா வாய்ப்பு கேட்டு வந்த தன்னை டைரக்டர் ரஞ்சித் பெங்களூருவிலுள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்து நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய நிர்வாணப் படங்களை நடிகை ரேவதிக்கு ரஞ்சித் அனுப்பி வைத்ததாகவும் அந்த வாலிபர் கூறியிருந்தார்.
ரேவதிக்கு பிடிக்கும் என்பதால் அனுப்பி வைத்ததாகவும் ரஞ்சித் தன்னிடத்தில் கூறியதாகவும் அந்த இளைஞர் புகாரில் தெரிவித்திருந்தார். வாலிபரின் புகார் தொடர்பாக டைரக்டர் ரஞ்சித் மீது அடுத்து ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டைரக்டர் ரஞ்சித்துடன் தன்னை இணைத்து பேசப்பட்டதால், நடிகை ரேவதி அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், என்னையும், டைரக்டர் ரஞ்சித்தையும் தொடர்புபடுத்தி வரும் செய்திகள் குறித்து நான் கேள்விப்பட்டேன். ஆனால், அப்படி எந்த போட்டோக்களையும் ரஞ்சித் எனக்கு அனுப்பி வைக்கவில்லை. எனவே , இதுதொடர்பாக நான் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் அப்டேட்!
கங்கனாவின் ‘எமெர்ஜென்சி’ வெளியாகுமா?