சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் தமிழ்நாட்டின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
இந்நிலையில், ’தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படத்தின் தயாரிப்பாளரான குனீத் மோங்கா “இந்திய தயாரிப்பு ஒன்றுக்கு முதல் ஆஸ்கரை வென்று இருக்கிறோம். இரண்டு பெண்கள் இதைச் செய்திருக்கிறோம். நான் நடுங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இன்று (மார்ச் 13 ) வெளியிட்டுள்ள பதிவில் ”இரண்டு பெண்களுக்கு இது கிடைத்திருக்கிறது. அம்மா, அப்பா, குருஜி, இணை தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், சிக்யா குழு, நெட்ஃப்ளிக்ஸ், சரஃபினா, என் கணவர் சன்னி ஆகியோருக்கு நன்றி. இந்த கதையை கொண்டு வந்த கார்த்திகிக்கு நன்றி. ஜெய் ஹிந்த்.
இந்தியாவை சேர்ந்த இரண்டு பெண்கள் உலக மேடையில் நின்று சரித்திர வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த படத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்திய தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்திய படம் ஒன்று முதல் முறையாக ஆஸ்கர் விருது வென்றிருக்கிறது.
அந்த பெருமை சிக்யா என்டர்டெயின்மென்ட் எனும் இந்திய தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது. கார்த்திகிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நெட்ஃப்ளிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய மேடை அமைத்துக் கொடுத்தது, எங்களை ஆதரித்தது. இந்திய சினிமாவின் எதிர்காலம் நன்றாக இருக்கிறது என்று நான் இன்று சொல்வேன்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி தம்பதி குறித்தும், அவர்களுக்கு யானையுடனான உறவு குறித்தும் உருக்கமாக இந்த ஆவணப்படத்தை கார்த்திகி கொன்சால்வ்ஸ் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆஸ்கரை வென்ற தமிழக குறும்படம்!
ஆஸ்கரை தட்டிச்சென்ற ‘நாட்டு நாட்டு’ !