ஆடி மாதத்தில் அதிக அளவில் கிடைக்கும் முருங்கை, பழங்காலத்திலிருந்தே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. முருங்கையிலையில் வைட்டமின்கள் பி, சி, கே, பீட்டா கரோட்டின், மாங்கனீஸ் மற்றும் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. இப்படிப்பட்ட முருங்கையிலையில் சூடான வடை செய்து அசத்தலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
கடலைப்பருப்பு – ஒரு கப்
முருங்கைக்கீரை (இலைகளை உருவி எடுக்கவும்) – 2 கப்
வெங்காயம் (பெரியது) – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்)
சீரகம் – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலைப்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதனுடன் முருங்கையிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, நன்கு சூடானதும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொன்னிறமாக, மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். சட்னி அல்லது டீயுடன் பரிமாறவும்.