உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. 2012 ஏப்ரல் 13 அன்று வெளியான இப்படத்தை காமெடி படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்த ராஜேஷ் இயக்கியிருந்தார்.
ஆர்யா, சந்தானம் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் வெற்றிக்கு பின் அவர் இயக்கிய இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தாலும் கமெடி படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு காமெடி நடிகர் சந்தானம் காரணமாக இருந்தார்.
தயாரிப்பாளர்,கதாநாயகனாக உதயநிதி இருந்தபோதும் படத்தின் அனைத்து விளம்பரங்களிலும் சந்தானம் முன்நிலைப்படுத்தப்பட்டார்.
படம் வெற்றிபெற்றது. 12 வருடங்களுக்கு பின் இதுதான் நான் நடிக்கும் கடைசிப் படம் என அறிவித்த மாமன்னன் படத்தை சீரியசான பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக, சிறந்த பிலிம் மேக்கராக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாரிசெல்வராஜ் இயக்கிய இந்தப் படம் நேற்றையதினம் கோவை விநியோக பகுதியில் 1.25கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருப்பது ஆச்சர்யமான ஒன்று.
இந்தப் படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் என்றாலும் படத்தின் விளம்பரத்தில் வடிவேல் முன் நிறுத்தப்பட்டார். முதல் படம் காமெடி என்றால் கடைசிப் படத்தில் தமிழக அரசியலில், ஆட்சி அதிகாரத்திற்கு வர பட்டியல் இனத்தவரை, அவர்களின் பிரச்சினையை பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அவர்களை தங்களுக்கு சமமாக மதித்து நடத்துவதில்லை என்பதை தனது கூர்மையான வசனங்களால் படம் முழுவதும் மாரி செல்வராஜ் பதிவு செய்திருக்கிறார்.
எந்த கட்சிகளில் இந்த அணுகுமுறை இன்று நிலவுகிறது அந்தக் கட்சிகளில் ஒன்றாக கருதப்படும் திமுகவின் இளைஞரணி செயலாளர், மாநில அமைச்சரின் தயாரிப்பில், அவரையே கதை நாயகனாக நடிக்க வைத்தது தமிழ் சினிமாவுக்கு புதிது. சாத்தியப்படாத ஒன்றை சாத்தியமாக்கி சாதித்திருக்கிறார் மாரி செல்வராஜ் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
கடந்த இரண்டு வாரங்களாக ஊடகம், சமூக வலைத்தளங்களில் மாரிசெல்வராஜ் 33 ஆண்டுகளுக்கு முன்பு வந்த தேவர் மகன் படம் பற்றி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் முன்னிலையில் பேசியது சர்ச்சைக்குரியதாகி, விவாதங்களை அதிகப்படுத்தியது.
குறிப்பிட்ட சில சமூக அமைப்புகள் மாமன்னன் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டாம் என்று தங்கள் அமைப்பு மூலம் பிரச்சாரம் செய்தது. கமல்ஹாசன் ரசிகர்கள் ஆண்டவரை விமர்சித்த மாரிசெல்வராஜ் இயக்கிய படத்தை ஓடிடி தளத்தில் பார்ப்போம் தியேட்டருக்கு போக வேண்டாம் என்று முகநூல் பக்கங்களில் பதிவு செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படம் என்பதால் கட்சிக்காரர்கள் அதிகம் வருவார்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய கழக செயலாளர்கள் சொந்தப் பொறுப்பில் மொத்தமாக டிக்கட் எடுத்து திரையரங்கை முதல் நாள் நிரப்பிவிடுவார்கள் என்கிற ஆருடங்கள் ஊடகங்களில் வெளியானது.
ஆனால் மாமன்னன் படத்தை வழக்கமாக வரக்கூடிய ஒரு திரைப்படமாக வெளியிட்டு அதன் வெற்றிதோல்வி என்ன என்பதை தீர்மானிக்கவே விரும்பினார் உதயநிதி ஸ்டாலின் என்கின்றனர் அவருடன் நெருக்கமாக இருக்கும் சினிமாவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள். அதற்கு காரணம் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் என்ன நோக்கத்திற்காக படங்களை விநியோகம் செய்ய களத்தில் இறங்கியதோ அதில் வெற்றிகண்டார்.
அரசியல், ஆட்சி அதிகாரத்திற்கு சென்றபின் அதனை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவன ஊழியர்கள் தவறாக பயன்படுத்துவதை உதயநிதி ரசிக்கவில்லை என்பதுடன் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியிட்டதில் நிறுவனத்திற்கு நியாயமாக வந்திருக்கவேண்டிய கமிஷன் தொகையில் முறைகேடு நடந்திருப்பதை அறிந்த உதயநிதி நாம் முழுமையாக நம்பியவர்கள் என்னையே ஏமாற்றுகிறார்கள் என்றால் மற்றவர்களிடம் எப்படி இருப்பார்கள் என்கிற மன உளைச்சலுக்கு உள்ளானார், எனக் கூறும் அவரது நட்பு வட்டம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊழியர்களை நீக்கினால் புகார்கள் உண்மை என்றாகி, ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என சொல்லும் அவர்கள் மாமன்னன் படத்தை அதன் போக்கில் விடுவோம்.
கட்சிக்காரர்களுக்கு அழுத்தம் கொடுத்து திரையரங்கை நிரப்ப வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார் என்கின்றனர். அதைப்போலவே நேற்றையதினம் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் தென் மாவட்டங்களில் பாதிப்பை தொடக்கத்தில் குறைந்த அளவு ஏற்படுத்தினாலும் அடுத்தடுத்த காட்சிகளில் படத்தின் வசூல் அதிகரித்தது என்கிறது தென்மாவட்ட தியேட்டர் வட்டாரங்கள்.
கொரோனா காலத்தில் மக்களின் மன அழுத்தங்களை தனது நகைச்சுவை வசனங்களின் மூலம் சல்லி சல்லியாக்கி குணப்படுத்திய நகைச்சுவை மருத்துவன் வடிவேல் நாம் சிரிக்க முடியாதவாறு நடித்துவிடுவாரா என்பதை பார்க்கவே பொது பார்வையாளர்கள் தியேட்டருக்கு வந்தனர்.
அவர்கள் நம்பிக்கையை தகர்த்து படம் முழுக்க சீரியசான புதுமுக நடிகர் வடிவேல் ரசிக்கப்பட்டார், நடிப்பு அசுரன் பகத்பாசில் அவர் படங்களை பார்க்கும் ரசிகர் கூட்டம் தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது.
அதுவும் மாமன்னன் படத்தை வெற்றிப்படமாக்கியது எனக் கூறும் திரையரங்க உரிமையாளர்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் எட்டு கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது. இரண்டாவது நாளான இன்று வசூல் குறைவாக இருக்கிறது என்கின்ற தியேட்டர் உரிமையாளர்கள் நாளை வசூல் கூடும் என நம்பிக்கை தெரிவிப்பதுடன் எதிர்மறையான விமர்சனங்கள் மாமன்னன் படத்திற்கு வசூல் மகுடம் சூட்டும் என்கின்றனர்.
இராமானுஜம்
புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால்
ஆசியக் கபடியில் ‘இந்தியா’ ஆதிக்கம்: 9வது முறையாக சாம்பியன்!