உதய் பாடகலிங்கம்
2021ஆம் ஆண்டின் ஒருபாதியை கோவிட்-19 விழுங்கிய நிலையில், மீதிப்பாதியில் தமிழ் சினிமா அடைந்த வெற்றிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இந்த சூழலிலேயே, தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளைச் சார்ந்த திரைக்கலைஞர்களும் 2022ஆம் ஆண்டை எதிர்கொண்டார்கள். அக்காலத்தில், கோவிட்-19 கோரத்தாண்டவத்திற்கு முந்தைய நிலையை அடைய முடியுமா என்பதே அவர்களது மனங்களைத் துளைத்துக் கொண்டிருந்தது. அதற்குப் பதில் கிடைத்திருக்கிறதா?
அபார வசூல் மழை!
என்னதான் நல்ல பொழுதுபோக்கைத் தந்தாலும், ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடியது என்பதே அது அடைந்த வெற்றியாக கருதப்பட்டது. இன்றோ, அது எத்தனை கோடி வசூல் என்பதைக் கவனிப்பதாக மாறியிருக்கிறது. முன்பெல்லாம் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் வசூல் கணக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த வேலையை ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் செய்யத் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடத்தில் ’டப்’ செய்து வெளியிடப்பட்ட ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ 500 கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை திரையரங்க வெளியீட்டின் மூலமாகப் பெற்றிருக்கிறது; அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பெற்ற வசூலும் இதில் அடங்கும்.
லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ சுமார் 420 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் அடைந்த வணிக வெற்றி இது. இதற்கடுத்து மூன்றாம், நான்காம் இடங்களை விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்குமாரின் வலிமை ஆகியன பெற்றிருக்கின்றன.

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படமும் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த வரிசையில் 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய படங்களாக திருச்சிற்றம்பலம், சர்தார், லவ் டுடே, டான் ஆகியன திகழ்கின்றன. இம்மூன்றுமே திரையிடப்பட்ட நாளன்று பெரிய வரவேற்பைப் பெறவில்லை; அதற்கடுத்த நாட்களில் இருந்தே மக்களின் கவனத்தைப் பெற்றன என்பது ஆச்சர்யமூட்டும் உண்மை.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு, கார்த்தியின் விருமன், மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு, அருண் விஜய்யின் யானை, அருள்நிதியின் டைரி, விக்ரமின் கோப்ரா, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி மற்றும் எஃப்ஐஆர், விஷாலின் லத்தி, விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகியனவும் திரையரங்கில் வசூல்ரீதியிலான வெற்றியைச் சுவைத்திருக்கின்றன. ஆண்டு இறுதியில் வெளியான படங்களில் ‘செம்பி’யும் ‘ராங்கி’யும் அத்தகைய வெற்றியைப் பெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னடத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ‘கேஜிஎஃப் 2’, ’காந்தாரா’ பெற்ற வசூல் வெற்றி, தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களைக் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு படத்தின் மொத்த பட்ஜெட்டில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் தவிர்த்துப் பெரும்பணம் திரையில் தென்படும் காட்சிகளுக்காகச் செலவழிக்கப்பட வேண்டுமென்ற விவாதங்களைத் தூண்டிவிட்டது.

நினைவில் நின்ற படங்கள்!
பொதுவாக, ஒரு திரைப்படத்தின் வெற்றியை வசூல் கணக்கின் மூலமாக மட்டும் தீர்மானித்திட முடியாது. அதே அளவுக்கு, அப்படம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா, திரைத்துறையின் போக்கை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறதா, சமூக கலாசார தனிமனித முன்னேற்றங்களுக்குத் துணை நிற்கிறதா என்பதற்குப் பதிலளிப்பதும் மிக முக்கியம்.

அந்த வகையில், இந்த ஆண்டில் மிகச்சிறப்பான சில கண்ணின் மணிகளைத் தந்திருக்கிறது தமிழ் திரையுலகம். ‘கார்கி’ தந்த கௌதம் ராமச்சந்திரன், ’கடைசி விவசாயி’ தந்த மணிகண்டன், விஷால் வெங்கட்டின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, சந்திரா தங்கராஜின் ‘கள்ளன்’, மனோஜ்-ஷ்யாமின் ‘குதிரைவால்’, மதிமாறனின் ‘செஃல்பி’, சபரி-சரவணனின் ‘கூகுள் குட்டப்பா’, பத்மகுமாரின் ‘விசித்திரன்’, சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, அருண்ராஜா காமராஜின் ‘நெஞ்சுக்கு நீதி’, ஆர்.ஜே.பாலாஜி – என்.ஜே.சரவணனின் ’வீட்ல விசேஷம்’, பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, ஸ்ரீகார்த்திக்கின் ‘கணம்’, ராம்நாத் பழனிகுமாரின் ‘ஆதார்’, ரா.கார்த்திக்கின் ‘நித்தம் ஒரு வானம்’, துவாரக் ராஜாவின் ‘பரோல்’ உள்ளிட்ட படங்கள் அவற்றின் கதையமைப்புக்காகவும் இயக்குனர்களின் கலைநேர்த்திக்காகவும் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன.

இப்படங்கள் தவிர்த்து சில காட்சிகளுக்காக, அடிப்படைக் கதைக்கருவுக்காக, இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களுக்காகப் பாராட்டுகளைப் பெற்ற படங்களும் கூட உண்டு. சில படங்கள் நல்ல முயற்சிகள் என்பதற்காக மட்டுமே பாராட்டுகளைப் பெற்றன. என்னதான் நற்பெயரைப் பெற்றாலும், திரையரங்கில் தொடர்ச்சியாக அப்படக் காட்சிகள் ஓடவில்லை என்பதே நிஜம். காரணம், குறைவான பார்வையாளர்கள் வருகை தந்ததே!
குறைந்தபட்சமாக இத்தனை திரையரங்குகளில் காட்சிகள் ஓட வேண்டுமென்று நிர்ணயிப்பதாலோ அல்லது குறைவான டிக்கெட் கட்டணம் வசூலிப்பதாலோ அல்லது மிகக்குறைவாக வசூலிக்கும் தன்மை கொண்ட அரங்குகளை அரசோ, தனியார் நிறுவனங்களோ அல்லது இரண்டும் இணைந்த கூட்டுச்செயல்பாட்டினால் உருவாக்குவதாலோ ‘லோ பட்ஜெட்’ படங்கள் மக்களிடம் கவனத்தைக் குவிக்கவும், அதன் வழியே அப்படைப்பு கொண்டாடப்படவும் வழிவகை செய்ய முடியும்.
மேற்சொன்ன படங்களில் சென்னையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் அவலத்தைப் பிரதிபலித்த ‘கார்கி’யும், தமிழ் மண் சார்ந்த மரபு வழிப் பழக்கவழக்கங்களையும் இயற்கை சார்ந்த வாழ்வியலையும் முன்வைத்த ‘கடைசி விவசாயி’யும் இந்திய சினிமாவுக்கு தமிழ் திரையுலகம் தந்த நல்முத்துக்கள். இவ்விரு படங்களும் திரையில் படர்ந்த காட்சிகளைத் தாண்டி ரசிகப் பெருமக்களைச் சிந்திக்க வைத்தன என்பது கூடுதல் சிறப்பு!
மொக்க படமா இது..!
எந்தப் படம் ‘மொக்க’ என்று ரசிகர்களால் வகைப்படுத்தப்படும் என்பது அவர்களுக்கே தெரியாத புதிர். ஒவ்வொருவருக்குமான விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், ரசனைகள் சார்ந்து அது மாறும். அதையும் மீறி, பெருவாரியான ரசிகர்களை எரிச்சலில் ஆழ்த்தியவை ‘மொக்க’ படங்களாக கருதப்படுகின்றன. நகைச்சுவை என்ற பெயரில் கடித்துக் குதறுவதோ, ஹாரர் என்ற பெயரில் அருவெருப்பூட்டுவதோ, காதல் என்ற பெயரில் பற்களை நறநறக்க வைப்பதோ இப்படங்கள் கட்டிக்கொள்ளும் புண்ணியத்தில் சேரும்.
அப்படிப் பார்த்தால் நாய் சேகர், இடியட், ஹாஸ்டல், ரங்கா, மாயோன், வேழம், டி பிளாக், பன்னிகுட்டி, குருதி ஆட்டம், கேப்டன், பஃபூன், டிராமா, பிரின்ஸ், காபி வித் காதல், மிரள், டிஎஸ்பி, நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், வரலாறு முக்கியம் போன்றவை இந்த பட்டியலில் இடம்பெறும். இன்னும் இந்த பட்டியல் பெரிதாக வாய்ப்புண்டு; சில படங்களைப் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதாலேயே அவற்றின் பெயர்கள் விடுபட்டிருக்கின்றன.
சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’, விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’, வடிவேலுவின் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கு, அந்தந்த நடிகர்களின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிதமிஞ்சிய அளவில் இருந்ததே முக்கியக் காரணம்.

மேலே சொன்ன மூன்று வகை பட்டியலிலும் இடம்பெறாமல் நடுவாந்தரமாக சில படங்கள் தேறும். தனிப்பட்ட ரசனையைப் பொறுத்து, ஒவ்வொருவரும் மேலே சொன்னவற்றுடன் அப்படங்களைப் பொருத்திப் பார்க்க முடியும்.
திருப்தி கிடைத்ததா?
2022ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி வரை 212 தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியிருக்கின்றன. டிசம்பர் 30ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் சில படங்கள் விடுபட்டுள்ளன. அதேபோல, ஓடிடி தளங்கள் வாயிலாக கிட்டத்தட்ட 22 படங்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழில் ‘டப்’ செய்து திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியிடப்பட்ட படங்கள் இதில் அடங்காது. இந்த எண்ணிக்கையே கோவிட்-19 உண்டுபண்ணிய வெறுமையை தமிழ் திரையுலகம் எதிர்கொண்டதற்குச் சாட்சி. ஆனால், அதனைக் கடந்து சென்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறதா என்பதே கேள்விக்குறியே.
திரையரங்குகளில் வெற்றி பெற்ற படங்கள் ஓடிடியில் கொண்டாடப்படாமல் போவதோ அல்லது ஓடிடியில் மட்டும் அதீதமாக வரவேற்பைப் பெறுவதோ 2022ஆம் ஆண்டில் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. இரண்டிலும் கொண்டாடப்பட்ட படங்களும் உண்டு. ஓடிடியில் வெளியானவற்றில் ‘டாணாக்காரன்’, ‘அனல் மேலே பனித்துளி’, ‘விட்னஸ்’ உட்பட பல அற்புதமான படைப்புகள் திரையரங்கில் வெளியானால் நன்றாக இருந்திருக்குமே என்ற பிரமிப்பை ஏற்படுத்தின. அவற்றின் சிறப்புகளை தனியாகத்தான் பேச வேண்டும்.

சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’ படம் திரையரங்கிலும் ஓடிடியிலும் பெரிய வெற்றியைப் பெறாமல், பின்னாட்களில் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பெற்ற விருதுகள் மூலமாக ரசிகர்களால் கவனிக்கப் பெற்றது. அப்படிக் கவனத்தைப் பெற மாட்டோமா என்று ஏங்கும் படைப்புகளும் நிறையவே இருக்கின்றன.
அனைத்தையும் தாண்டி தமிழ் திரையுலகைப் பெருமைப்படுத்தி, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் திசைதிருப்பும் வகையிலான ‘அசல்’ படைப்புகள் நிறைய வெளிவர வேண்டுமென்பதே ஒரு தேர்ந்த ரசிகனின் விருப்பமாக இருக்கும். அத்தகைய திருப்தியை, வரும் 2023ஆம் ஆண்டிலாவது தமிழ் திரையுலகம் தர வேண்டும்!
பாமக பற்றி பிரசாந்த் கிஷோர்: பொதுக்குழுவில் அன்புமணி தகவல்!
எப்போதும் பிரியாணி தான் டாப்: சொமேட்டோ