தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திரம் என்ற எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக நேற்று (நவம்பர் 9) இரவு காலமானார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கணேசன் என்ற தனது பெயர் டெல்லி கணேஷ் ஆக மாறியது எப்படி என்று அவர் அளித்த பேட்டி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர், “என்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாலச்சந்தர். என்னிடம் அவர், சினிமாவிற்கு தகுந்த மாதிரி உன் பெயரை மாற்றிக்கொள் என்று கூறினார். அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.
அந்த நேரத்தில் பாலச்சந்தர் என்னிடம் ‘நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் உன் பெயரை டெல்லி கணேஷ் என்று வைத்துகொள் என்றார். நானும் அவர் சொன்னவாறு பெயரை மாற்றிவிட்டேன். மேலும் என்னுடைய நிஜ பெயர் கணேசன் தான்’ என்று கூறியுள்ளார்.
டெல்லி கணேஷ் என்ற பெயரின் காரணமாக அவரை பலரும் டெல்லியை சேர்ந்தவர் என்றே கருதுகின்றனர். உண்மையில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த வல்லநாடு கிராமத்தில் இவர் பிறந்துள்ளார்.
படிப்பில் கெட்டிக்காரரான டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன்பு 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். அப்போது நடிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து, பின்னர் சினிமாவில் முக்கியமான நடிகர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநரை சந்திக்க தயாராகும் விஜய்
கையில் டேட்டாவுடன் கேள்விகளை அடுக்கிய ஸ்டாலின்.. ஷாக் ஆன திமுக நிர்வாகிகள்!