ஆந்தாலஜி திரைக்கதை பாணியில் வெவ்வேறு வித்தியாசமான கதைகளை உள்ளடக்கிய திரைப்படமாக தயாரிக்கப்பட்ட’ ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் இந்த வருடம் முதல் காலாண்டில் வெளியானது.
கலையரசன், கௌரி கிஷன், ஜனனி ஐயர் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். இந்த படத்தின் முதல் ட்ரைலர் ஆபாசமான காட்சிகள், உரையாடல்களுடன் வெளியானது. கடுமையான விமர்சனங்கள், கண்டனங்கள் எழுந்த போதும் தளராத படக்குழு ஒரு புத்தகத்தின் அட்டை படத்தை வைத்து அதன் உள்ளடக்கத்தை தீர்மானிக்க வேண்டாம் என்று இரண்டாவது டிரைலரை வெளியிட்டு படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்கள்.
வணிக ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் வெற்றி பெற்ற ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாட் ஸ்பாட் படத்திற்கு முன்னதாக அடியே, திட்டம் இரண்டு படங்களை இயக்கியிருந்த இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ஹாட்ஸ்பாட் படத்தை ஆந்தாலஜி பாணியில் நான்கு கதைக்களங்களை ஒன்றன்பின் ஒன்றாக விவரிக்கும் வகையில் திரைக்கதை அமைந்து இயக்கியிருந்தார்.
திருமண முறையில் உள்ள உறவுச்சிக்கல், அதை எதிர்கொள்ளும் இன்றைய தலைமுறையின் சவால்கள் கொண்ட காட்சி அமைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
இந்நிலையில் ஹாட்ஸ்பாட் இரண்டாவது பாகம் தற்போது உருவாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தயாரிக்கவுள்ளார். இதற்காக நேற்று (ஆகஸ்ட் 9) மாலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த படக்குழு ஹாட்ஸ்பாட் படத்தின் 2ம் பாகத்திற்கான புரோமோ வீடியோ ஒன்றையும் திரையிட்டனர்.
புரோமோ எப்படி?
முதல் இரவு நாளில் அறைக்குள் செல்லும் இயக்குநருக்கு அவரது மாமனார் பரிசு ஒன்றை அறையில் வைத்துள்ளதாக கூறுகிறார். உள்ளே மாஸாவோடு குளிர்பானத்துடன் சேரில் அமர்ந்து இருக்கும் விஷ்ணு விஷால் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு பரிசு கொடுக்க, அதை திறந்து பார்க்கும் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
அதில் செருப்பு காணப்படுகிறது. இதைப்பார்த்து புது மாப்பிள்ளை திகைக்க, இரண்டாவது பார்ட்டையும் சிறப்பாக செய்ய வேண்டும், மக்கள் செருப்பால் அடித்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார் விஷ்ணு விஷால்.
இதையடுத்து புது மாப்பிள்ளையிடம் அவருக்கு முதல் இரவு தன்னுடன் தான் என்றும் பொண்டாட்டியுடன் இல்லை என்றும், ஹாட் ஸ்பாட் 2 படத்தின் கதைகளை சொல்லும்படியும் விஷ்ணு விஷால் கூறுகிறார். இதனால் திகைத்தாலும் விக்னேஷ் கார்த்திக் அதற்கு தயாராகிறார். இதனிடையே, ஆரம்பிக்கலாமா என்று கூறி விஷ்ணு விஷால் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு தயாராவதாக புரமோ முடிகிறது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…